தமிழகத்தில் இருந்து பா.ஜ.க. பிரதமர் உருவாக வாய்ப்பு இல்லை

தமிழகத்தில் இருந்து பா.ஜ.க. பிரதமர் உருவாக வாய்ப்பு இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Update: 2023-06-11 18:27 GMT

கவர்னர் வரம்பு மீறுகிறார்

புதுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக கவர்னர் ரவி தொடர்ந்து வரம்புகளை மீறி பேசி வருகிறார். இதனை தமிழ்நாட்டு மக்கள், அரசியல் கட்சியினர் எவ்வளவு நாட்கள் பொறுத்துக்கொள்வது என்பது கேள்வியாக உள்ளது. கவர்னரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடர வேண்டும். பிரதமர் பதவியில் தமிழகத்தை சேர்ந்த 2 பேர் வர முடியாமல் போனதாக கடந்த கால வரலாறை பேச அமித்ஷாவுக்கு என்ன தகுதி இருக்கிறது. தமிழகத்தில் இருந்து பா.ஜ.க. பிரதமரை உருவாக்குவதற்கு வாய்ப்பே இல்லை.

மாநில அளவிலான கூட்டணிகள்

வருகிற 23-ந் தேதி அனைத்து எதிர்கட்சி கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் தொடங்க உள்ளது. பா.ஜ.க. வீழ்த்தப்பட உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த மாநில அளவில் கூட்டணிகள் உருவாகும். பிரதமர் வேட்பாளரை முன்மொழிந்து தான் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பது இல்லை. பா.ஜ.க.வை வீழ்த்துவோம், தேர்தலுக்கு பின் அடுத்ததாக யார் பிரதமர் என தீர்மானிப்போம். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசு ஏன் நிதி ஒதுக்கவில்லை. தி.மு.க. அரசு தவறுகள் செய்யும் போது நாங்கள் விமர்சிக்கிறோம். கள்ளச்சாராயம் விற்பனை, போதை பொருள் வினியோகத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம். வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டதை குறைக்க கூறுகிறோம். சில துறைகளில் முறைகேடுகள், தவறுகள் நடந்தால் அதனை கண்டிக்கிறோம்.

தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்

சென்னை-சேலம் 8 வழிச்சாலையில் ஏற்கனவே எடுத்த நிலையில் தமிழக அரசு மாறவில்லை. பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த விவசாயிகளிடம் முழு ஒத்துழைப்பு பெற வேண்டும். தமிழகத்தில் கடந்த ஆட்சியை விட தற்போது சட்டம்-ஒழுங்கு நிதானமாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையோடு பேசி நாங்கள் எத்தனை தொகுதியில் போட்டியிடுவது என்பது முடிவெடுக்கப்படும். தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்ற உலக திரைப்பட விழா நிறைவு நாளில் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் சின்னதுரை எம்.எல்.ஏ. உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்