நபிகள் நாயகத்தை அவமதித்த பாஜக நிர்வாகிகள் நூபுர் சர்மா, நவீன் ஜிண்டாலை கைது செய்யவேண்டும் - சீமான்

கோடிக்கணக்கான இசுலாமியர்களின் மனஉணர்வுகளைக் காயப்படுத்திய பாஜக நிர்வாகிகளை கைதுசெய்ய வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-06 16:29 GMT

சென்னை,

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோடிக்கணக்கான இசுலாமிய மக்கள் தங்களது இறைத்தூதராகப் போற்றக்கூடியப் பெருமகனார் நபிகள் நாயகம் அவர்களைத் தொலைக்காட்சி விவாதத்திலும், சமூக வலைத்தளத்திலும் இழிவுப்படுத்திய பாஜக நிர்வாகிகளான நூபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகிய இருவரின் மதவெறிக்கருத்துகள் உலகரங்கில் இந்தியாவுக்குப் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது.

வெறுப்பரசியலும், மதஒதுக்கலும் செய்து, நாட்டை மதத்தால் பிளந்து, பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபடும் பாஜகவினுடைய நிர்வாகிகளின் இச்செயலினால், பன்முகத்தன்மைக்குப் பெயர்பெற்ற இந்திய நாட்டின் மதிப்பு மொத்தமாகச் சீர்குலைந்திருக்கிறது. எல்லோரையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்கானக் கோட்பாட்டை முன்வைக்காது, சக குடிகளைப் பகையாளிகளாகக் காட்டி, இனஒதுக்கல் அரசியல் செய்து வந்த இலங்கையின் ஆட்சியாளர்களும், அதிகார மையங்களும் மொத்தமாக வீழ்ந்து, அந்நாட்டு மக்களாலேயே வெறுத்து ஒதுக்கப்பட்டு, அந்நிலத்தில் வெடித்துள்ள மக்கள் கிளர்ச்சி கண்முன்னே சாட்சியாக இருக்கையில், மதவாத அரசியலைக் கையிலெடுத்து நாட்டைப் புதைகுழிக்குள் தள்ளும் பாஜக அரசின் கொடுங்கோல் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியது.

பாஜக ஆட்சி பொறுப்பேற்றது முதல் கடந்த 8 ஆண்டுகளாகத் தலைதூக்கியுள்ள மதவாதப் பரப்புரைகளும், அச்சுறுத்தல்களும், இசுலாமியர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், பழங்குடியினர் மீதான கோரத் தாக்குதல்களும் நாட்டைக் கற்காலத்துக்கு இழுத்துச்சென்றிருக்கின்றன. அந்தவகை, மதவாதப் பரப்புரைகளின் நீட்சியாகவே நூபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகிய இருவரின் நச்சுக்கருத்துகளும் அமைந்திருக்கின்றன. இதன்மூலம், அரபு நாடுகளில் எழுந்திருக்கும் பெரும் கொதிப்பலையும், இந்தியப்பொருட்களைப் புறக்கணிப்போமென முன்வைக்கப்படும் முழக்கங்களும், புலம்பெயர்ந்து அந்நாடுகளில் வாழும் இலட்சணக்கணக்கான இந்தியக்குடிகளின் வாழ்வாதாரத்தையும், வேலைவாய்ப்பையும் பெரும் கேள்விக்குறியாக்கியிருக்கின்றன.

கத்தார் சென்றிருக்கிற குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு அந்நாட்டுத் துணை அதிபர் ஷேக் அப்துல்லா பின் அகமதுடன் அளிக்கப்படவிருந்த விருந்து கடைசி நேரத்தில் ரத்துசெய்யப்பட்டதும், வெங்கையா நாயுடுவின் செய்தியாளர் சந்திப்பு தவிர்க்கப்பட்டதுமான நிகழ்வுகள் மூலம் விளையும் பெரும் எதிர்விளைவுகளை அறிந்துகொள்ளலாம். அரபு நாடுகள் மட்டுமல்லாது ஈரான், பாகிஸ்தான் போன்ற இசுலாமிய நாடுகளும் தனது கடும் கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளன. ஒட்டுமொத்தமாக, இச்சம்பவத்தின் மூலம் பன்னாட்டரங்கில் இந்திய நாட்டின் மதிப்பு குலைந்து, பல கோடிக்கணக்கான ரூபாய் பொருளாதார இழப்பும் ஏற்படும். இதுமட்டுமல்லாது, எரிபொருட்கள் உள்ளிட்டப் பல்வேறு தேவைகளுக்காக அரபு நாடுகளைச் சார்ந்திருக்கும் இந்தியப்பெருநாடும், இந்நாட்டைச் சேர்ந்த பல கோடிக்கணக்கான மக்களும் பாதிப்படையக்கூடும்.

ஆகவே, பெருமகனார் நபிகள் நாயகத்தை அவமதித்து கோடிக்கணக்கான இசுலாமிய மக்களின் மனஉணர்வுகளைக் காயப்படுத்திய பாஜக நிர்வாகிகளான நூபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகிய இருவரின் அவதூறுப் பரப்புரைக்கு பாஜக தலைமை வெளிப்படையாக மன்னிப்புக்கோர வேண்டும்; இருவர் மீதும் வழக்குப் பதிவுசெய்து அவர்களை உடனடியாகச் சிறைப்படுத்த வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்