கோவையில் பா.ஜனதா நிர்வாகிகள் உண்ணாவிரதம்

கோவையில் பா.ஜனதா நிர்வாகிகள் உண்ணாவிரதம்

Update: 2022-07-05 12:34 GMT

கோவை

தி.மு.க. அரசை கண்டித்து கோவையில் பா.ஜனதா நிர்வாகிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பா.ஜனதா சார்பில் உண்ணாவிரதம்

தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை என்றும், தமிழகத்தில் ஊழல், லஞ்சம் அதிகரித்து வருகிறது என்றும் பா.ஜனதா குற்றம் சாட்டி வருகிறது. எனவே தி.மு.க. அரசை கண்டித்து தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று பா.ஜனதா சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து கோவை சிவானந்தாகாலனியில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் பாலாஜி உத்தரம ராமசாமி தலைமை தாங்கினார். வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், மலுமிச்சம்பட்டி பாபுஜி சுவாமிகள் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்கள்.

இந்த உண்ணாவிரதத்தில் பா.ஜனதா நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமும் எழுப்பினார்கள். முன்னதாக வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை

சட்டமன்ற தேர்தல் நேரத்தில் தி.மு.க. கூறிய வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. பெட்ரோல்-டீசலுக்கு வரியை குறைப்போம் என்று சொல்லிதான் ஆட்சிக்கு வந்தனர். ஆனால் இன்று அதை மறந்துவிட்டனர். இந்த ஒரு வருட ஆட்சியில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்துவிட்டது. லாக்-அப் மரணம் அதிகளவில் நடந்து வருகிறது.

பஸ் நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் இரவு நேரத்தில் பெண்கள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை நீடித்து வருகிறது. மேலும் பல திட்டங்கள் முடக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக பெண்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்கள் முடக்கப்பட்டு உள்ளன. அதுபோன்று ஸ்மார்ட் சிட்டி திட்டங்களும் முடக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பரவல்

கோவையில் உள்ள அனைத்து சாலைகளும் குண்டும்-குழியுமாக படுமோசமாக காட்சியளிக்கிறது. ஆனால் அந்த சாலைகள் சரிசெய்யப்பட்டு வருவதாக கூறுகிறார்கள். எங்கும் சாலைகள் சரிசெய்யப்படவில்லை. இதனால் வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள்.

அதுபோன்று கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து ஆய்வகங்களிலும் பரிசோதனை முறையாக நடைபெறுகிறதா என்பதை கண்காணித்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை உரிய முறையில் மாவட்ட நிர்வாகம் வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்த பா.ஜனதா நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்