மிசாவையே பார்த்தவர்கள் நாங்கள், எதுவாக இருந்தாலும் சட்டப்படி எதிர்கொள்வோம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை சட்டப்படி சந்திப்போம் என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-13 22:48 GMT

சென்னை,

தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதர் அசோக் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்திலும் சோதனை நடைபெற்றது. மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்று வந்தது.

இதனைத்தொடர்ந்து சென்னையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் 17 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த சோதனை நிறைவடைந்தது. சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்தனர்.

இந்த நிலையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜியை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து சென்னை ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஒமந்தூரர் மருத்துவமனைக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். தொடர்ந்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, சேகர்பாபு உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், " அமைச்சர் செந்தில் பாலாஜி நலமாக இருக்கிறார். இது பா.ஜ.கவின் பழிவாங்கும் நடவடிக்கை. இந்த உருட்டல், மிரட்டல்களுக்கு திமுக அரசு அஞ்சாது. அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை சட்டப்படி சந்திப்போம்" என்று அவர் கூறினார்.

செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில் சோதனை நிறைவடைந்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் 10 மணி நேரத்திற்கும் மேலாக அதிகார்கள் சோதனையில் ஈடுபட்டனர். தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில் இருந்து 3 பைகளில் ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்