அ.தி.மு.க.வினரை ஒன்றிணைய விடாமல் பா.ஜ.க. தடுக்கிறது -அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

அ.தி.மு.க.வினரை ஒன்றிணைய விடாமல் பா.ஜ.க. தடுக்கிறது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

Update: 2022-10-31 20:44 GMT

திருச்சி,

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று தி.மு.க. வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு முன்னிலை வகித்து பேசியதாவது:-

தமிழக கவர்னர் எதிர்க்கட்சியை போல் செயல்படுகிறார். இந்த ஆட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கும் நோக்கத்தோடு பா.ஜ.க.வினர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். சின்ன விஷயத்தையும் பா.ஜ.க.வினர் ஊதி பெரிதாக்குகிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் 10 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று சவால் விட்டுக்கொண்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சியில் எந்த ஒரு குறையும் கூறமுடியாத அளவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியை நடத்தி வருகிறார்.

அ.தி.மு.க.வை ஒன்று சேரவிடாமல்...

இப்போது அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டு கிடக்கிறது. நான்தான், நீதான் என்று அவர்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

இதனால் அ.தி.மு.க.வின் இடத்தை பிடித்து விட வேண்டும், எதிர்க்கட்சியாக வந்துவிட வேண்டும் என்று பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது. அந்த நோக்கத்தில் அவர்கள் அ.தி.மு.க.வை ஒன்று சேரவிடாமல் பார்த்து கொள்வதோடு, தடுத்தும் வருகிறார்கள்.

40-க்கு 40 இடங்கள்

நான் வெளிப்படையாக கூறுகிறேன். இன்றைக்கு இருக்கக்கூடிய அரசு அதிகாரிகள் அனைவரும் மத்திய அரசை பார்த்து பயப்படுகிறார்கள். தற்போது தி.மு.க. எந்த அளவிற்கு பலமாக உள்ளதோ வருங்காலத்தில் இதோடு இன்னும் பலமாக இருக்க வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றி 40-க்கு 40 இடங்களிலும் தி.மு.க. வெற்றி பெற வேண்டும். அதற்கு நாம் அனைவரும் உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்