பா.ஜ.க. ஆர்ப்பாட்டம், சாலை மறியல்
அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து திருவண்ணாமலை, ஆரணி, வந்தவாசியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து திருவண்ணாமலை, ஆரணி, வந்தவாசியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அண்ணாமலை கைது
சென்னையில் பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போலீசாரின் அனுமதியின்றி நடைபெற்றதால் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மாநில தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை விடுதலை செய்யக்கோரி நேற்று மாலை 7 மணி அளவில் திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள அறிவொளி பூங்கா எதிரில் திருவண்ணாமலை மாவட்ட பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஆன்மிக பிரிவு மாநில துணைத் தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். இதில் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் முரளிமோகன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சுந்தரமூர்த்தி, முன்னாள் மாவட்டத் தலைவர் ஜீவானந்தம், மாவட்ட துணைத்தலைவர் அருணை ஆனந்தன், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜதமயந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டவாரு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆரணி
ஆரணி நகரில் பழைய பஸ் நிலையம் எம்.ஜி.ஆர். சிலை அருகில் மாவட்ட பொது செயலாளர் சரவணன் தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் நித்தியானந்தம், ஆரணி நகர தலைவர் வக்கீல் சரவணன், ஒன்றிய தலைவர் பார்த்திபன் மற்றும் ஆரணி நகர பா.ஜ.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
வந்தவாசி
வந்தவாசியில் நகர தலைவர் சுரேஷ் தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், அண்ணாமலையை கைது செய்ததை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பின்னர் திடீரென பஸ் மறியலில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்ட பொது செயலாளர் முத்துசாமி, மாவட்ட செயலாளர் குருலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் நவநீதன், சித்தரவேலு, நகர துணைத்தலைவர் சதீஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.