பா.ஜ.க. புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் வாக்குவாதம்
ஆரணியில் பா.ஜ.க. புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை கண்டித்து கண்ணில் கருப்பு துணி கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆரணி
ஆரணியில் பா.ஜ.க. புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை கண்டித்து கண்ணில் கருப்பு துணி கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.
அறிமுக கூட்டம்
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆரணி சட்டமன்ற பா.ஜ.க. நிர்வாகிகள் அறிமுக கூட்டம் ஆரணி ஆற்றுப்பாலம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் இன்று நடந்தது.
மாவட்ட தலைவர் போளூர் சி.ஏழுமலை தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் நித்தியானந்தம், பிரபு, மாவட்ட பொது செயலாளர் எம்.சரவணன், அலமேலு, மாவட்ட செயலாளர்கள் டில்லிபாபு, திருஞானசம்பந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரணி நகர புதிய தலைவர் வக்கீல் எஸ்.சரவணன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவரும், மாவட்ட பார்வையாளருமான டால்பின் ஸ்ரீதர் கலந்து கொண்டு பேசினார்.
வாக்குவாதம்
கூட்டத்தின் தொடக்கத்தில் மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் புவனேஷ் தன்னை கூட்டத்திற்கு அழைக்க வேண்டாம் என பலரிடமும் மாவட்ட தலைவர் கூறியுள்ளார்.
இது அவரது சொந்த கூட்டமா?, கட்சி கூட்டம் தானே, எனவே, அனைவரையும் அவர் தான் அழைக்க வேண்டும் என்று ஆவேசமாக கூறினார். மாவட்ட தலைவரும் அதற்கு மறுப்பு தெரிவித்து ஆவேசமாக பேசினார்.
இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏறபட்டது.
மேடையில் இருந்த பலரும் இருவரையும் சமாதானம் செய்தனர்.
இந்த கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட புதிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகர பொருளாளர் பசுபதி நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டம்
இதற்கிடையில் திருமண மண்டபத்தின் முன்பு மாவட்டத் தலைவரையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து முன்னாள் மாவட்ட செயலாளர் வக்கீல் ஜெயகோவி தலைமையில் முன்னாள் நிர்வாகிகள் கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொண்டர்களை ஒருமையில் பேசியும், முன்னாள் நிர்வாகிகளுக்கு மரியாதை அளிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு வரும் நிர்வாகத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழிப்புணர்வு ஊர்வலம்
முன்னதாக ஆரணி அண்ணா சிலை அருகில் இருந்து மாவட்ட தலைவர் போளூர் சி.ஏழுமலை தலைமையில் வரும் 75-வது சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட பாரத பிரதமர் மோடி, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோர் உத்தரவின் பேரில் அனைவரும் தேசிய கொடியை கையில் ஏந்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊர்வலமாக சென்றனர்.