எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வத்துடன் அண்ணாமலை அடுத்தடுத்து சந்திப்பு - பின்னணி என்ன?

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தை பாஜக தலைவர் அண்ணாமலை அடுத்தடுத்து சந்தித்து பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-06-23 12:55 GMT

சென்னை,

சென்னை வானகரத்தில் இன்று அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு வந்த ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

அதன்பின்னர், அதிமுக அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், இரட்டை தலைமையால் அதிமுகவுக்கு பின்னடைவு, சங்கடம் ஏற்பட்டுள்ளது. அதிமுகவை ஒற்றை தலைமையில்ன் கீழ் கொண்டுவருவது தொடர்பாக விவாதிக்க வேண்டும். அடுத்த பொதுக்குழுக்கான தேதியை இந்த கூட்டத்திலேயே அறிவிக்க வேண்டும் என்று கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், ஒற்றை தலைமை குறித்து விவாதிக்க ஜூலை 11-ல் அதிமுகவின் பொதுக்குழு மீண்டும் கூடும் என அறிவித்தார்.

இதையடுத்து, நிகழ்ச்சியின் பாதியில் மேடையில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் ஆகியோர் வெளியேறினர். இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

இந்த கூட்டத்திற்கு பின் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுடன் தங்கள் வீடுகளுக்கு சென்றனர்.

இதனிடையே, அதிமுக பொதுக்குழு கூட்ட பரபரப்பு அடங்குவதற்குள் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி ஆகியோர் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு சென்று ஆலோசனை நடத்தினர்.

அங்கு சிறிது நேரம் ஆலோசனை நடத்திய பின் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வீட்டிற்கும் அண்ணாமலை மற்றும் சிடி ரவி சென்று ஆலோசனை நடத்தினர்.

பொதுக்குழு கூட்ட பரபரப்பு அடங்குவதற்குள் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி ஆகியோர் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்-ஐ தனித்தனியே சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்-ஐ பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து சந்தித்தது ஏன்? என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ள இந்திய ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளாராக களமிறக்கப்பட்டுள்ள திரவுபதி முர்முவுக்கு அதிமுக ஆதரவு அளிக்கக்கோரியே எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் திரவுபதி முர்மு நாளை தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார். அவ்வாறு வேட்பு மனுவை தாக்கல் செய்யும்போது கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உடன் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதை வலியுறுத்தும் விதத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.

அதேவேளை, அதிமுகவின் கூட்டணியில் பாஜக இருந்துவருகிறது. கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் இருவரும் ஒரே கட்சியில் இருக்கிறீர்கள். நாம் கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணியில் இருந்தால் தான் வலுவாக இருக்க முடியும். ஆகவே சமரசமாக செல்லுங்கள் என்ற காரணத்தை வலியுறுத்தி அதிமுக உடையாமல் சமரசமாக செல்லுங்கள் என எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்திடம் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் சிடி ரவி அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்