விவசாயியிடம் மாமூல் கேட்டு மிரட்டிய பா.ஜ.க.நிர்வாகி கைது
தியாகதுருகத்தில் விவசாயியிடம் மாமூல் கேட்டு மிரட்டிய பா.ஜ.க.நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
தியாகதுருகம்,
தியாகதுருகம் அருகே திம்மலை கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் ஏழுமலை (வயது 31) விவசாயி, இவர் தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே தனக்கு சொந்தமான இடத்தில் புதிதாக கடை கட்டி வருகிறார். இந்நிலையில் தியாகதுருகம் ராஜலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவரும், வடக்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவருமான ரகுநாதபாண்டியன் (43) என்பவர் ஏழுமலையிடம் சென்று நீங்கள் கடை கட்ட வேண்டும் என்றால் எனக்கு மாமூலாக ரூ.10 ஆயிரம் தர வேண்டும் என கூறினார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளர். இதில் ஆத்திரமடைந்த ரகுநாதபாண்டியன் ஏழுமலையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகுநாதபாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.