விவசாய பயிர்களை காட்டெருமைகள் சேதப்படுத்துவதை தடுக்க வேண்டும்
அணைக்கட்டு பகுதியில் விவசாய பயிர்களை, காட்டெருமைகள் சேதப்படுத்துவதை தடுக்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
குறைதீர்வு கூட்டம்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா அளவிலான விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் தாசில்தார் ரமேஷ் தலைமையில் நடந்தது. துணை தாசில்தார்கள் ராமலிங்கம், குமரேசன், தலைமை நில அளவர் சதீஷ், வட்ட வழங்க அலுவலர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் விவசாயிகள் கலந்துகொண்டு குறைகளை தெரிவித்தனர். அப்போது விவசாயிகள் பேசியதாவது:-
ஒடுகத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயத்திற்கு வழங்கப்படும் மும்முனை மின்சாரம் நாள் ஒன்றுக்கு 16 முறை துண்டிக்கப்படுகிறது. இதனால் விவசாய மின்மோட்டார்கள் அடிக்கடி பழுது ஆகிறது. உரிய நேரத்தில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டு பயிர்கள் கருகும் நிலை உள்ளது. மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்க வேண்டும்.
தடுக்க வேண்டும்
உரங்கள் வெளியில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதால் கூட்டுறவு கடன் சங்கங்களில் அதிக அளவில் உரம் இருப்பு வைத்து வழங்க வேண்டும். தோட்டக்கலைத்துறை சார்பில் வழங்கப்படும் தக்காளி உள்ளிட்ட விதைகள் உரிய பருவ காலத்திற்குள் வழங்க வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒடுகத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நெற்பயிர்களில் நோய் தாக்குதல் அதிகமாக இருப்பதால் வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பயிர்களை காப்பாற்ற ஆலோசனை வழங்க வேண்டும்.
வண்ணாதாங்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நிலக்கடலை செடிகளை காட்டெருமைகள் சேதப்படுத்தி வருகிறது. இதனை தடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
விவசாய நிலங்களில் மண் பரிசோதனை பணிகளை தீவிரப் படுத்த வேண்டும். அணைக்கட்டு பெரிய தாலுகாவாக இருப்பதால் ஒடுகத்தூர் பகுதியில் தனியாக தோட்டக்கலைத் துறை அலுவலகம் திறக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
தாசில்தார் ரமேஷ் பேசுகையில் கூட்டத்தில் விவசாயிகள் வைத்த அனைத்து கோரிக்கைகளும் முழுமையாக நிறைவேற்றப்படும். இந்த கூட்டத்தில் பங்கேற்காத போக்குவரத்து, கூட்டுறவு உள்ளிட்ட துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு பரிந்துரைக்கப்படும். அடுத்த கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.