முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும்: அமைச்சர்கீதாஜீவன்

தூத்துக்குடிவடக்கு மாவட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என்று அமைச்சர்கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-02-27 18:45 GMT

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை(புதன்கிழமை) தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கட்சியினர் கொண்டாட வேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

முதல்-அமைச்சர் பிறந்தநாள் விழா

தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நாளை (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து கிளைக்கழகங்கள் மற்றும் வார்டு கழகங்கள் தோறும் கட்சி கொடியேற்றியும், இனிப்புகள் வழங்கியும், கட்சி கொள்கை விளக்க பாடல்கள் ஒலிபரப்பியும் உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கிறது.

குழந்தைகளுக்கு தங்கமோதிரம்

அன்றைய தினம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோவில்பட்டி, விளாத்திகுளம் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் மாற்றுதிறனாளிகள் இல்லங்களில் அறுசுவை விருந்து அளிக்கப்படுகிறது. மேலும் மார்ச் மாதம் முழுவதும் நகரம், ஒன்றியம், பேரூர் கழகங்கள் வாரியாக ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும், பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கும் விழாவும் நடக்கிறது.

அதே போன்று நாளை மாலை 6 மணிக்கு சென்னை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் பாராட்டுவிழா பொதுக்கூட்டத்துக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் இருந்து கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு மாவட்டத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்