கைதிகளுக்கான கேண்டீனில் பயோமெட்ரிக் முறை தொடக்கம்

வேலூர் ஜெயிலில் கைதிகளுக்கான கேண்டீனில் பயோமெட்ரிக் முறை தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2023-07-07 16:27 GMT

கேண்டீன்

தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் கைதிகளுக்கான கேண்டீன்கள் (சிறைவாசி தேநீர் விடுதி) செயல்படுகிறது. இந்த கேண்டீன்களில் கைதிகளின் நலனுக்காக சோப்பு, பிஸ்கட், டீ, காபி, பன், பற்பசை மற்றும் பிரஷ், தேங்காய் எண்ணெய், பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் கட்டண அடிப்படையில் அட்டை மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஒவ்வொரு 'ஏ' வகுப்பு கைதியும் வாரத்திற்கு ரூ.1,000 வரை பொருட்கள் வாங்கிக் கொள்ளவும், 'பி' வகுப்பு கைதிகள் இரண்டு வாரத்திற்கு ரூ.750 வரை பொருட்கள் வாங்கவும் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த நடைமுறையில் முறைகேடுகளை தவிர்க்கவும், வெளிப்படை தன்மை இருக்கவும் பயோமெட்ரிக் முறை பல கேண்டீன்களில் சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ்பூஜாரி உத்தரவின்பேரில் கொண்டுவரப்பட்டு வருகிறது.

பயோமெட்ரிக் முறை

அதன்படி வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் டி.ஐ.ஜி. ராஜலட்சுமி வழிகாட்டுதல்பேரில் நேற்று பயோமெட்ரிக் முறை கொண்டுவரப்பட்டது. இதனை ஜெயில் சூப்பிரண்டு அப்துல்ரகுமான் தொடங்கி வைத்தார்.

கைதிகள் பலர் தங்களுக்கு தேவையான பொருட்களை பயோ மெட்ரிக் முறையில் வாங்கிக்கொண்டனர்.

இதுகுறித்து ஜெயில் அதிகாரிகள் கூறியதாவது:-

கைதிகள் பயோமெட்ரிக் முறையில் கைரேகை ஸ்கேன் அல்லது ஸ்மார்ட் கார்டு மூலம் மட்டுமே பொருட்களை வாங்க முடியும். கேண்டீன்களில் விற்பனை மற்றும் தொகை விவரங்கள் அனைத்தும் இப்போது கணினிமயமாக்கப்பட்டுள்ளன. கைதிகள் தங்கள் வாராந்திர வரம்பு இருப்பு மற்றும் மொத்த நிகர இருப்பு ஆகியவற்றை எந்த நேரத்திலும் அறிய முடியும். ஏனெனில் அனைத்து பதிவுகளும் எதிர்கால குறிப்புக்காக கணினியில் சேமிக்கப்படுகிறது. இதன் செயல்பாடுகளை சிறை தலைமையகத்தில் இருந்து பார்க்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்