பட்டுக்கோட்டை;
நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற உயிர் உரங்களை பயன்படுத்த வேண்டும் என்று வேளாண்மை உதவி இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ச.மாலதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உயிர் உரங்கள்
ஊட்டச்சத்து மேலாண்மையில் உயிர் உரங்களின் பயன்பாடு முக்கியம். பயிர்கள் மண்ணில் இருந்து ஊட்டச்சத்துக்களை நுண்ணுயிரி முறைகளால் எளிதில் எடுத்துக் கொள்ள இந்த உயிர் உரங்கள் உதவுகிறது. உயிர் உரங்களைக் கொண்டு விதைகளை விதை நேர்த்தி செய்யும்போது ஒரு ஏக்கருக்கு தேவையான விதையுடன் 50 மில்லி அசோஸ் பைரில்லாம் மற்றும் 50 மில்லி பாஸ்போ பாக்டீரியா திரவத்தை தேவையான அளவு ஆறிய அரிசி கஞ்சியுடன் கலந்து 30 நிமிடங்கள் நிழலில் உலர்த்தி பின்பு விதைக்க வேண்டும்.
அதிக மகசூல்
ஒரு ஏக்கருக்கு 150 மில்லி அசோஸ் பைரிலம் மற்றும் 150 மில்லி பாஸ்போபாக்டீரியா திரவ உயிர் உரத்தை தேவையான அளவு நீரில் கலந்து நாற்றின் வேர் பகுதியை 30 நிமிடங்கள் நனையுமாறு செய்து பின்பு நடவு செய்ய வேண்டும்.வயலில் இடுதல் முறையில் ஒரு ஏக்கருக்கு 200 மில்லி திரவ உயிர் உரத்தை மக்கிய தொழு உரத்துடன் கலந்து நடவுக்கு முன் வயலில் இடவேண்டும். நீர் வழி உரம் இடுதல் முறையில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு மில்லி திரவ உரத்தை (அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா ஒவ்வொன்றும் ஒரு மில்லி) என்ற அளவில் நீர் வழியே கலந்து விடுதல் வேண்டும். இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம்.