இருதரப்பினர் மோதல்; 8 பேர் காயம்
இருதரப்பினர் மோதலில் 8 பேர் காயம் அடைந்தனர்
ஏர்வாடி:
திருக்குறுங்குடி அருகே உள்ள தெற்கு மாவடி வேளார் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகநம்பி (வயது 63). மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் விவசாயி ஜெயபால் (72). இவர்கள் இருவருக்குமிடையே இடப்பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. சம்பவத்தன்று ஆறுமுகநம்பி தனது வீட்டு கட்டிட பணிகளுக்காக லாரி மூலம் குண்டுக்கல் அடித்து வைத்திருந்தார். இதை பாதையில் வைத்திருப்பதாக ஜெயபால் கூறியதாக தெரிகிறது. இதுசம்பந்தமாக இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த ஜெயபால் குடும்பத்தினர், ஆறுமுகநம்பி குடும்பத்தினரை சரமாரியாக கற்களால் தாக்கினர். இதில் ஆறுமுகநம்பி, அவரது மகன்கள் தங்கராஜ், முத்துசெல்வராஜ், தங்கராஜ் மனைவி சுகுமாரி, தங்கராஜ் மகன் நளின் ஆகிய 5 பேர் காயமடைந்தனர்.
இதேபோல் ஆறுமுகநம்பி குடும்பத்தினர் தாக்கியதில் ஜெயபால், அவரது மனைவி பாலசுந்தரி, முரளி மனைவி ஆனந்த ஏஞ்சல் ஆகிய 3 பேரும் காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தனர். இதுதொடர்பாக 16 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.