இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி

எஸ்.எஸ்.எல்.வி.டி2 வகை ராக்கெட் விண்ணில் நிலை நிறுத்தியது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கூறினார்.

Update: 2023-02-10 18:52 GMT

எஸ்.எஸ்.எல்.வி.டி2 வகை ராக்கெட் விண்ணில் நிலை நிறுத்தியது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கூறினார்.

இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் முன்னாள் தலைவர் சிவன் அவரது மனைவி மாலதியுடன் சிவகங்கை அருகே உள்ள நாட்டரசன் கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- சாதாரணமாக ஒரு ராக்கெட்டை முழு வடிவமாக்க 40 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை ஆகும். ஆனால் இந்த எஸ்.எஸ்.எல்.வி. டி2 வகை ராக்கெட் 3 நாட்களில் முழு வடிவமைப்பு பெறும். அதேபோல் இதற்கு கவுண்டவுன் நேரம் குறைவாகவே இருக்கும். இதனை வேகமாக சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தலாம். சிறிய வகையிலான செயற்கைகோள் தற்சமயம் நிலைநிறுத்தப்பட்டு வரும் நிலையில் பெரிய வகையான ராக்கெட்டுகளை பயன்படுத்த இனி தேவையில்லை. அந்த வகையில் இந்த ராக்கெட் நிலை நிறுத்தப்பட்டிருப்பது நமக்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும். கடந்த முறை அனுப்பப்பட்ட ராக்கெட் சரியான சுற்றுவட்ட பாதையை அடையவில்லை. இந்த முறை அவை சரி செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. இதன்மூலம் சிறிய வகை செயற்கைகோள்களை அனுப்பும் வாய்ப்பு அதிகமாக வரும். தற்போது அனுப்பப்பட்ட செயற்கைகோள்கள் இந்த ராக்கெட்டை சோதனை செய்யவே அனுப்பப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊக்கப்படுத்துகிறது

நிலவுக்கு ராக்கெட் அனுப்பும் பணிக்கான சோதனைகள் தற்சமயம் நடைபெற்று வருகிறது. அந்த சோதனைகளுக்கு பின்னர் ராக்கெட் நிலவுக்கு அனுப்பப்படும். மத்திய அரசு மாணவர்களை ஆராய்ச்சியாளர்கள் ஆக்குவதற்கான அதிக ஊக்கங்களை அளித்து வருகிறது. குறிப்பாக ஸ்டார்ட் அப் நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்களின் பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளித்து வருகிறது. அதனை மாணவர்கள் நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாணவர்கள் ஏதேனும் புதிதாக கண்டுபிடித்தால் அதற்காக நிறுவனங்கள் எதிலும் சேர தேவையில்லை. அவர்களே நேரடியாக செயல்பட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அவர் அங்குள்ள கம்பர் சமாதியை மனைவியுடன் சென்று பார்வையிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்