தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 1-ந் தேதி நடக்கிறது.

Update: 2023-04-17 19:15 GMT

தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 1-ந் தேதி நடக்கிறது.

தஞ்சை பெரிய கோவில்

தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெரிய கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் கடந்த மாதம்(மார்ச)் 3-ந் தேதி நடந்தது.

கொடியேற்றம்

இந்த நிலையில் 18 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு சந்திரசேகரர், பஞ்சமூர்த்தி சுவாமிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினார்.

தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க கொடியேற்றம் நடந்தது.

முன்னதாக கோவிலில் பஞ்சமூர்த்திகளுக்கு கொடிமரம் முன்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் வளாகத்தில் பல்லக்கில் எடுத்து வந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் அரண்மனை பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர்கள் செந்தில், ரெங்கராஜ், உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தேரோட்டம்

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் அடுத்த மாதம்(மே) 1-ந் தேதி காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் நடக்கிறது.

விழாவின் முதல் நாளான நேற்று மாலை 6.30 மணியளவில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து 2-ம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு மேல் பல்லக்கில் விநாயகர் புறப்பாடும், மாலை 6.30 மணிக்கு சிம்ம வாகனத்தில் விநாயகர் புறப்பாடும் நடக்கிறது. 3-ம் நாளான 19-ந் தேதி காலை 8 மணிக்கு பல்லக்கில் விநாயகர் புறப்பாடும், மாலை 6.30 மணிக்கு மூஞ்சுறு வாகனத்தில் விநாயகர் புறப்பாடும் நடக்கிறது.

4-ம் நாளான 20-ந் தேதி காலையில் விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. மாலையில் மேஷ வாகனத்தில் சுப்பிரமணியர் புறப்பாடு நடக்கிறது. விழாவின் கடைசி நாளான மே 4-ந் தேதி தீர்த்தவாரி விழாவும், மாலையில் வெள்ளி ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலையில் கொடியிறக்கத்துடன் விழா முடிவடைகிறது.

Tags:    

மேலும் செய்திகள்