பவானிதினசரி மார்க்கெட்டை இடமாற்றம் செய்யும் பணி தற்காலிகமாக நிறுத்தம்கருத்து கேட்பு கூட்டத்தில் முடிவு

பவானி தினசரி மார்க்கெட்டை இடமாற்றம் செய்யும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக கருத்து கேட்பு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-04-19 21:14 GMT

பவானி தினசரி மார்க்கெட்டை இடமாற்றம் செய்யும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக கருத்து கேட்பு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பவானி தினசரி மார்க்கெட்

பவானி நகராட்சி தலைவர் சிந்தூரி இளங்கோவன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் நேருவை சந்தித்து பவானி நகரில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருந்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட அமைச்சர் நேரு தமிழகம் முழுவதும் தினசரி மார்க்கெட்டுகளை அபிவிருத்தி செய்ய அல்லது புனரமைப்பு செய்ய புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும் பவானி நகராட்சிக்குக்கு சொந்தமான தினசரி மார்க்கெட்டை புனரமைக்க அல்லது புதிய கட்டிடம் கட்டிக் கொள்ள ரூ.3 கோடி அரசு நிதி வழங்கப்படும் என தனது துறை மானிய கோரிக்கையின் போது அறிவித்திருந்தார்.

ரூ.3கோடி ஒதுக்கீடு

இதைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாக துறையை சேர்ந்த அதிகாரிகள் கடந்த சில வாரங்களுக்கு முன் வந்து தற்போது செயல்பட்டு வரும் பவானி நகராட்சி தினசரி மார்க்கெட்டை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்த வியாபாரிகள் காலை 9 மணிக்கு மேல் தினசரி மார்க்கெட் திறக்கப்படுவதாகவும், ஆனால் மக்கள் யாரும் வருவதில்லை எனவும், எனவே மாற்று இடம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.

இதையடுத்து மார்க்கெட்டுக்கு மாற்று இடம் அமைத்து கொடுக்க அரசின் சார்பில் ரூ.3கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து உடனடியாக பணிகள் தொடங்க நகராட்சி நிர்வாகத்தினர் திட்டமிட்டனர்.

கருத்து கேட்பு கூட்டம்

இதனைத் தொடர்ந்து நேற்று பகல் 11.30 மணி அளவில் பவானி நகராட்சி அலுவலகத்தில் தினசரி மார்க்கெட் குறித்த கருத்துக் கேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தலைவர் சிந்தூரி இளங்கோவன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) கதிர்வேல் முன்னிலை வகித்தார்.

நகராட்சி அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் நகர தி.மு.க. செயலாளர் ப.சீ. நாகராசன், முன்னாள் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் தவமணி, நகர தி.மு.க. பொருளாளர் கு.செல்வராஜ், நகர அ.தி.மு.க. செயலாளர் எம்.சீனிவாசன், நகர செயலாளர் வக்கீல் பாலமுருகன் மற்றும் அனைத்து கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

அப்போது தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகள், பவானி தினசரி மார்க்கெட் ஏற்கனவே இருக்கும் இடத்திலேயே செயல்பட வேண்டும் என்று கூறினார்கள். அ.தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர், பவானி தினசரி மார்க்கெட் புதிய பஸ் நிலையம் அருகே வந்தால் வியாபாரம் செழிக்கும் என்று தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் கதிர்வேல் கூறும்போது, 'பெருவாரியான மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டு அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். மேலும் இன்னும் கூடுதலாக நிதி பெற்று கட்டிடம் எந்த இடத்தில் கட்ட வேண்டும் என ஆராய்ந்து கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.' அதுவரை பணிகள் எதுவும் தொடராது. தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்' என உறுதி அளித்தார். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சுமார் 3½ மணி நேரம் இந்த கூட்டம் நடந்தது.


Tags:    

மேலும் செய்திகள்