பவானிசாகர் அணை நீர்மட்டம் 104 அடியை தாண்டியது பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வெள்ள அபாய எச்சரிக்கை

Update: 2022-11-09 20:25 GMT

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104 அடியை தாண்டியதால் பொதுப்பணித்துறை சார்பாக பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணை

சத்தியமங்கலத்தில் இருந்து மேற்கே 16 கி.மீ. தூரத்திலும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து வடகிழக்கில் 36 கி.மீ. தூரத்திலும் பவானி ஆறு, மோயாறு கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது பவானிசாகர் அணை. தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை மற்றும் தமிழ்நாட்டில் 2-வது பெரிய அணை என்ற பெருமை இந்த அணைக்கு உண்டு. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது.

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் வழியாக 5 மதகுகள் மூலம் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதேபோல் பவானி ஆற்றில் 9 மதகுகள் மூலம் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசன வாய்க்கால்கள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை என்பது குறிப்பிடத்தக்கது.

104 அடியை தாண்டியது

இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.47 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,723 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றின் வழியாக வினாடிக்கு 550 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 600 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 105 அடியை எந்த நேரத்திலும் எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பவானிசாகர் பொதுப்பணித்துறை சார்பாக அதன் உதவி கோட்ட பொறியாளர் பொங்கியண்ணன் பவானிசாகர் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரை செல்லும் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் கரையோர பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்தாணி

இதேபோல் அத்தாணி, ஆப்பக்கூடல், கீழ்வாணி, மூங்கில்பட்டி ஆகிய பகுதிகளில் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பவானிசாகர் செயற்பொறியாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் அத்தாணி மற்றும் ஆப்பக்கூடல் பேரூராட்சி, வருவாய் துறையின் சார்பில் ஒலி பெருக்கி மூலம் ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்பக்கூடல் போலீசார் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பு கருதி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்