சென்னை கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கத்திற்கு பாரதியார் பெயர்

சென்னை கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கத்தின் பெயர் பாரதியார் மண்டபம் என்று மாற்றப்பட்டது. அதற்கான கல்வெட்டை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைத்தார்.

Update: 2023-08-06 21:42 GMT

சென்னை,

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு 4 நாள் பயணமாக வந்துள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று காலை சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக அரங்கத்தில் நடைபெற்ற சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார். அதனைத்தொடர்ந்து கவர்னர் மாளிகையில் தங்கிய அவர் நேற்று இரவு 7 மணிக்கு அங்குள்ள 'தர்பார் ஹால்' அரங்கத்தின் பெயர் மாற்ற விழாவில் கலந்துகொண்டார்.

அந்த அரங்கத்துக்கு 'பாரதியார் மண்டபம்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அங்கு பாரதியார் உருவப்படத்தையும், அதற்கான கல்வெட்டையும் அவர் திறந்து வைத்தார். தொடர்ந்து பாரதியாரின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னரின் மனைவி லட்சுமி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதிக்கு வரவேற்பு

ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு, கவர்னர் ஆர்.என்.ரவி மரத்தால் செய்யப்பட்ட அம்மன் சிலையை நினைவு பரிசாக வழங்கினார். முதல்-அமைச்சர் பூங்கொத்து வழங்கினார்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. ஜனாதிபதி திரவுபதி முர்மு, கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இசையமைப்பாளர் இளையராஜா எம்.பி., இருளர் இனத்தை சேர்ந்த பத்மஸ்ரீ வடிவேல் கோபால் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினார்கள்.

அதனைத்தொடர்ந்து பாரதியார் பெருமைகள் குறித்து பேராசிரியர் ஞானசம்பந்தன் பேசினார். அதன் பின்னர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு

பின்னர் அங்கு நடைபெற்ற இரவு நேர உணவு விருந்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உள்பட அனைவரும் கலந்துகொண்டனர். முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்க ஜனாதிபதி திரவுபதி முர்மு வந்தபோது கவர்னர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி லட்சுமி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அதனைத்தொடர்ந்து அவருக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், ரகுபதி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக்குமார், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, நிதித்துறை செயலாளர் சண்முகம், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, முன்னாள் தலைமை செயலாளர் ராஜேந்திரன், மேற்கு வங்காள முன்னாள் கவர்னர் கோபாலகிருஷ்ண காந்தி, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரங்கராஜன், ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி, மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி, போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் மற்றும் அரசு உயர் அதிகாரிகள், முப்படை தளபதிகள், பல்வேறு நாடுகளை சேர்ந்த துணை தூதர்கள், முக்கிய பிரமுகர்கள் ஜனாதிபதிக்கு வரவேற்பு கொடுத்து தங்களை அறிமுகம் செய்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு பாரதியாரின் பேரன் அர்ஜூன் பாரதியும் அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர், ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு சால்வை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

பொம்மை மீது ஆர்வம்

முன்னதாக மாலை 3.15 மணியளவில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர் லட்சுமிபிரியா மற்றும் இருளர், குறும்பர், தோடர் உள்ளிட்ட 8 பிரிவுகளை சேர்ந்த 32 பழங்குடியினர் கலந்துகொண்டனர். அவர்கள் தயாரித்த கைவினை பொருட்களை ஜனாதிபதியிடம் அவர்கள் காண்பித்தனர்.

அதில் சுடுமண்ணால் செய்யப்பட்ட டெரகோட்டா பொம்மையை ஆர்வத்துடன் கையில் வாங்கி ஜனாதிபதி பார்த்தார்.

பின்னர் அவர்கள் மத்தியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது:-

'குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்'

"மத்திய-மாநில அரசுகள் பழங்குடியினருக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதை முறையாக நீங்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள். குறிப்பாக வீடு கட்டும் திட்டம் இருக்கிறது. அந்த திட்டத்தை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுங்கள். உங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் உங்களது குழந்தைகள் நன்றாக கல்வி கற்க வேண்டும். அவர்களை பெற்றோராகிய நீங்கள் ஊக்குவிக்க வேண்டும்''.

இவ்வாறு அவர் பேசினார்.

அதனைத்தொடர்ந்து மாலை 4.15 மணியளவில் முக்கிய பிரமுகர்கள் பலரை சந்தித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார்.

புதுச்சேரி

ஜனாதிபதி திரவுபதி முர்மு அரசுமுறை பயணமாக இன்று (திங்கட்கிழமை) புதுச்சேரி செல்கிறார்.

இதற்காக அவர் சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு இன்று காலை 10.35 மணிக்கு புதுவை விமான நிலையத்தை சென்றடைகிறார். அங்கு அவரை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரவேற்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்