'பாரத் நெட்' திட்ட விளக்க கூட்டம்
நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ‘பாரத் நெட்’ திட்ட விளக்க கூட்டம் நடைபெற்றது.
நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் பாரத் நெட் திட்ட விளக்க கூட்டம் நேற்று நடந்தது. பாரத் நெட் என்பது நாட்டின் அனைத்துக் கிராமங்களுக்கும் பாதுகாப்பான இணைய சேவையை பெற, இத்திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டதாகும்.
தமிழகத்தில் இத்திட்டத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் 2-வது கட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 524 கிராமங்கள் இணைய இணைப்புக்கு உட்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
அதையொட்டி நெமிலி ஒன்றியத்துக்கு உட்பட்ட 47 கிராமங்களின் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோருக்கு பாரத் நெட் திட்டத்தின் நோக்கங்கள் பற்றி விரிவாக கூறப்பட்டது. மேலும் இத்திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் 1 ஜி.பி.பி.எஸ். அளவிலான அலைக்கற்றையாவது அனைத்துக் கிராமங்களுக்கும் கிடைக்கும் என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டது.
அதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராமன், பாஸ்கரன், ஒன்றிய பொறியாளர் ராஜேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்கள் பலர் கலந்து கொண்டனர்.