புதியம்புத்தூர்-ஓட்டப்பிடாரம் இடையேசாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

புதியம்புத்தூர்-ஓட்டப்பிடாரம் இடையே சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

Update: 2023-06-12 18:45 GMT

புதியம்புத்தூர்-ஓட்டப்பிடாரம் இடையே சாலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டு உள்ளது.

மதுவிலக்கு

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அப்போது, நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கா.வள்ளியம்மாள் தலைமையில், கட்சியினர் கொடுத்த மனுவில், தமிழகத்தில் உடனடியாக முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். மேலும் மதுவினால் ஏற்படக்கூடிய விளைவுகளை எதிர்கொள்ளும் விதமாக அதிக இடங்களில் வழகாட்டுதல் முகாம்கள் அமைக்கப்பட்டு மதுப்பழக்கம் உடையவர்களுக்கு சிகிச்சையும் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட வேண்டும். இதுவரை மதுவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், மகளிருக்கும் உரிய வழிகாட்டுதல்களையும், நிவாரணங்களையும் வழங்கிட அரசு முன்வர வேண்டும் என்று கூறி உள்ளனர்.

ஆக்கிரமிப்பு

திராவிடர் கழக மண்டல தலைவர் சு.காசி தலைமையில் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், புதியம்புத்தூர்- ஓட்டப்பிடாரம் சாலையில் தனியார் ஆக்கிரமிப்புகளால் சுருங்கி வருகிறது. இதனால் போக்குவரத்துக்கு பெரும் சிரமமாக இருக்கிறது. வாகன விபத்து அபாயமும் நீடித்து வருகிறது. இந்த சாலையில் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் சென்று வர மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே, தனியார் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி சாலை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர்.

சமத்துவ மக்கள் கழகத்தினர் மாவட்ட செயலாளர் பி.எம்.அற்புதராஜ் தலைமையில் கலெக்டடர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், தூத்துக்குடி அய்யர்விளை பகுதியைச் சேர்ந்த ஜெயகணேசன் என்பவர் கடந்த 25.05.2023 அன்று காலை தூத்துக்குடி காய்கறி மார்கெட் பகுதியில் கீரை வியாபாரம் முடித்து, அந்த பகுதியில் உள்ள அண்ணா சிலையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்பு வேலியில் கைப்பட்டு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

அவரது குடும்ப சூழ்நிலை மற்றும் மனைவி, குழந்தைகள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் அவரது மனைவிக்கு படிப்புக்கேற்ற அரசு வேலை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவருக்கு ஆதரவற்ற விதவை சான்று வழங்கி அதன் மூலம் மாதாந்திர நிதியுதவி வழங்கவும், பிற்படுத்தபட்டோர் நலத்துறை சார்பில் வீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்