மதுரை-போடி இடையே110 கி.மீ. வேகத்தில் ரெயில் சோதனை ஓட்டம்:இன்று நடக்கிறது

மதுரை-போடி இடையே 110 கி.மீ. வேகத்தில் விரைவு ரெயில் சோதனை ஓட்டம் இன்று நடக்கிறது.

Update: 2023-06-13 18:45 GMT

ரெயில் சேவை

மதுரை-போடி இடையே மீட்டர் கேஜ் ரெயில் பாதையை அகல ரெயில்பாதையாக மாற்றும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த ரெயில் பாதையில் மதுரை-தேனி இடையே முன்பதிவு இல்லாத பயணிகள் ரெயில் போக்குவரத்து கடந்த ஆண்டு தொடங்கியது. போடி வரை பணிகள் முடிந்ததை தொடர்ந்து பல்வேறு கட்ட சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

இதையடுத்து தேனி வரை இயக்கப்படும் பயணிகள் ரெயில் நாளை (வியாழக்கிழமை) முதல் போடி வரை நீட்டிக்கப்பட உள்ளது. இதேபோல், சென்னை-மதுரை இடையே வாரம் 3 முறை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை போடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிக்கப்பட்ட ரெயில் சேவையும் நாளை முதல் தொடங்குகிறது. சென்னையில் இருந்து நாளை புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை மறுநாள் காலை தேனிக்கு வந்தடைகிறது.

சோதனை ஓட்டம்

ரெயில் போக்குவரத்து நீட்டிப்பை முன்னிட்டு மதுரை-போடி இடையே விரைவு ரெயில் சோதனை இன்று (புதன்கிழமை) நடக்கிறது. 110 கி.மீ. வேகத்தில் இந்த விரைவு ரெயில் சோதனை ஓட்டம் நடக்கிறது. இதற்காக மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 10 மணியளவில் புறப்படும் இந்த ரெயில், பகல் 11.15 மணியளவில் போடி ரெயில் நிலையத்துக்கு வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பிறகு 11.45 மணிக்கு அந்த ரெயில் போடியில் இருந்து புறப்பட்டு பகல் 1 மணிக்கு மதுரைக்கு சென்றடையும்.

இந்த ரெயில் சோதனை ஓட்டம் காரணமாக ரெயில்வே கேட்கள் முன்கூட்டியே மூடப்படும். ரெயில் வந்து செல்லும் நேரங்களில் தண்டவாளம் பகுதியில் மக்கள் யாரும் செல்லக்கூடாது என்று ரெயில்வே நிர்வாகம் மற்றும் தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்