அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு இடையேயானமண்டல விளையாட்டு போட்டி தொடக்கம்

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு இடையேயான மண்டல விளையாட்டு போட்டிகளை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தொடங்கி வைத்தார்.

Update: 2022-12-21 18:45 GMT

தூத்துக்குடியில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு இடையேயான மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தொடங்கி வைத்தார்.

விளையாட்டு போட்டி

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை சார்பில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு இடையேயான 39-வது மண்டல அளவிலான விளையாட்டு போட்டி தூத்துக்குடி தருவை மைதானத்தில் நேற்று தொடங்கியது. போட்டி தொடக்க விழாவுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது, விளையாட்டு போட்டிகளில் ஒரு இலக்கோடு விளையாடினால்தான் வெற்றி பெற முடியும், அதே போல் நமது வாழ்க்கையிலும் நமக்கென்று ஒரு இலக்கை அமைத்து கொண்டு அதை நோக்கி சென்றால்தான் வாழ்க்கையில் சாதிக்க முடியும். அதேபோன்று நாம் நம்மால் முடிந்த அளவுக்கு பிறருக்கு உதவி செய்தால் நமது வாழ்க்கையை நாம் மகிழ்ச்சியாக வாழ முடியும். வெற்றி தோல்வி இரண்டுமே வாழ்க்கையில் முன்னேறுவதற்கான படிக்கட்டுகளாகும். தோல்வியை கண்டு சோர்வடையாமல், அந்த தோல்வியே அடுத்த வெற்றிக்கான படிக்கட்டுகள் என்பதை நீங்கள் தெரிந்து கொண்டாலே வாழ்க்கையில் நிறைய சாதிக்கலாம்.

சாதனையாளராக..

நமது ஆரோக்கியமே நமக்கு மிகப்பெரிய சொத்தாகும். உடல் ஆரோக்கியமாக இருந்தாலே மனம் ஆரோக்கியமாக இருக்கும். மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்காக உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சிகளிலும் கவனம் செலுத்துங்கள். எண்ணங்கள் வலிமையானது, உங்களது நல்ல எண்ணங்களே உங்களை வெற்றியை நோக்கி வழிநடத்தி செல்லும். ஆகவே மாணவ, மாணவிகளாகிய நீங்கள் கல்வியோடு சேர்ந்து விளையாட்டுகளிலும் பங்கேற்று பல வெற்றி பெற்று சாதனையாளர்களாக வரவேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து நடந்த விளையாட்டு போட்டிகளில் நெல்லை மண்டலத்துக்கு உட்பட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களை சேர்ந்த 300 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகள் தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் வேல்முருகன், நெல்லை மண்டல பயிற்சி இணை இயக்குநர் செல்வகுமார், வ.உ.சி துறைமுக ஆணைய மேற்பார்வை என்ஜினீயர் வேதநாராயணன், தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்