டி.சுப்புலாபுரம்-டி.பொம்மிநாயக்கன்பட்டி இடையே5 இடங்களில் பாலம் கட்டும் பணி
டி.சுப்புலாபுரம்-டி.பொம்மிநாயக்கன்பட்டி இடையே 5 இடங்களில் பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தில் இருந்து டி.பொம்மிநாயக்கன்பட்டி செல்வதற்கு சாலை வசதி கிடையாது. இதனால் இந்த கிராமங்களுக்கு இடையேயான சுமார் 2 கிலோமீட்டர் தூரமுள்ள பாதையில் பொதுமக்கள், விவசாயிகள் நடந்து சென்று வந்தனர். டி.சுப்புலாபுரம் கிராமத்தில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விரைந்து செல்வதற்காக பொதுமக்கள் இந்த பாதையை பயன்படுத்தி வந்தனர். ஆனால் முறையான சாலை வசதி இல்லாததால் அவசர காலங்களில் இந்த வழியாக சிரமத்துடன் செல்ல வேண்டிய நிலை இருந்தது.
இதனால் டி.சுப்புலாபுரம்-டி.பொம்மிநாயக்கன்பட்டி இடையே தார்சாலை அமைக்க வேண்டும் என்று கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து பலமுறை அளவீடு பணிகள் நடைபெற்றும் சாலை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன்காரணமாக விவசாயிகள், பொதுமக்கள் சிரமம் அடைந்து வந்தனர்.
இந்நிலையில் டி.சுப்புலாபுரம்-டி.பொம்மிநாயக்கன்பட்டி இடையே இணைப்பு சாலை அமைக்க தமிழக முதல்-அமைச்சரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.2 கோடியே 29 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து முதற்கட்டமாக இந்த சாலையில் 5 இடங்களில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதன்பின்னர் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் 30 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற உள்ளதால் அந்த பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.