சிறந்த கலைஞர்கள் கலை விருதுகள் பெற அடுத்தமாதம் 15-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

சிறந்த கலைஞர்கள் கலை விருதுகள் பெற அடுத்தமாதம் 15-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

Update: 2023-06-13 18:45 GMT


சிறந்த கலைஞர்கள் கலை விருதுகள் பெற அடுத்தமாதம் 15-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலை விருதுகள்

தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட கலை மன்றத்தின் மூலம் சிறந்த கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கப்பட உள்ளது. அதன்படி இயல், இசை, நாடகத்தில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு விருது வழங்க கலெக்டர் தலைமையில் தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பாட்டு, பரதநாட்டியம், கும்மி கோலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், தோல்பாவைக்கூத்து, பொம்மலாட்டம், நையாண்டிமேளம், கரகாட்டம், காவடி, பொய்க்கால், குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், கணியான் கூத்து, ஓவியம், சிற்பம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், ஆழியாட்டம், கைச்சிலம்பாட்டம், சிலம்பாட்டம் மற்றும் வில்லிசை, செவ்வியல் கலைகள், நாட்டுப்புற கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கலாம்

18 வயதுக்கு உட்பட்ட கலைஞர்களுக்கு கலை இளமணி, 19 முதல் 35 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை வளர்மணி, 36 முதல் 50 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை சுடர்மணி, 51 முதல் 65 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை நன்மணி, 66 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு கலை முதுமணி விருதுகள் வழங்கப்படவுள்ளன. வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் 30 சிறந்த கலைஞர்களுக்கு பொற்கிழி பட்டயம் மற்றும் பொன்னாடை வழங்கப்படும்.

தகுதி வாய்ந்த கலைஞர்கள் விண்ணப்பத்துடன் வயது, முகவரி சான்று, அடையாள அட்டை, ஆதார் அட்டை, புகைப்படம் மற்றும் கலை அனுபவ சான்றுகளுடன் உதவி இயக்குனர், மதுரை மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனருக்கு அடுத்த மாதம் 15-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்