ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட 1,000 பேர் கைது
பழனி அருகே தொப்பம்பட்டி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட 1,000 பேர் கைது செய்யப்பட்டனர்.
முற்றுகை போராட்டம்
தொப்பம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட புஷ்பத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் செல்வராணி மகுடீஸ்வரன். இவரும், அந்த ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்ட பா.ஜ.க. பொதுச்செயலாளர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன், பொருளாளர் ஆனந்த் ஆகியோர் தலைமையிலான பா.ஜ.க.வினரும் என 1,000-க்கும் மேற்பட்டோர் தொப்பம்பட்டி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று திடீரென்று கூடினர். பின்னர் அவர்கள் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்ைத நடத்தினர். அப்போது அவர்கள், புஷ்பத்தூர் ஊராட்சிக்கு வழங்க வேண்டிய நிதியை அதிகாரிகள் முறையாக வழங்காமல் உள்ளனர். எனவே ஊராட்சிக்கு சேர வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும். அதுவரையில் இந்த போராட்டம் நடைபெறும் என்று கூறியதுடன் கலைந்து செல்ல மறுத்தனர்.
1,000 பேர் கைது
இதைத்தொடர்ந்து கூடுதல் பாதுகாப்பு பணிக்காக பழனி டவுன், அடிவாரம், தாலுகா உள்ளிட்ட போலீஸ் நிலைய போலீசாரும் அங்கு வந்தனர். தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சத்தியராஜ் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போராட்டம் நடத்திய பா.ஜ.க.வினர் சிலர் ஒன்றிய அலுவலகத்தின் நுழைவு வாயில் கேட்டை திறந்து உள்ளே செல்ல முயன்றனர். இதனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி தலைவர் செல்வராணி மகுடீஸ்வரன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் உள்பட 1,000 பேரை போலீசார் கைது செய்து, அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்த முற்றுகை போராட்டத்தால் தொப்பம்பட்டியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.