பெங்களூரு பாசஞ்சர் ரெயில் நடுவழியில் நிறுத்தம்- பயணிகள் வாக்குவாதம்

ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொண்டதால் முன்னறிவிப்பு இன்றி பெங்களூரு பாசஞ்சர் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. ரெயில் நிலைய அதிகாரிகளிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-08-05 14:14 GMT

ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொண்டதால் முன்னறிவிப்பு இன்றி பெங்களூரு பாசஞ்சர் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. ரெயில் நிலைய அதிகாரிகளிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாசஞ்சர் ரெயில்

பெங்களூரு-ஜோலார்பேட்டை இடையே தினமும் பாசஞ்சர் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. காலை 8.30 மணியளவில் பெங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த ரெயில் நண்பகல் 12.30 மணியளவில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் வந்தடைகிறது. பின்னர் மீண்டும் பிற்பகல் 2 மணியளவில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து பெங்களூரு நோக்கி பாசஞ்சர் ரெயில் புறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை 8.30 மணிக்கு வழக்கம்போல் பாசஞ்சர் ரெயில் பெங்களூருவிலிருந்து புறப்பட்டு ஜோலார்பேட்டை வந்து கொண்டிருந்தது.

ஆனால் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொண்டதால் முன்னறிவிப்பின்றி திடீரென பெங்களூரு பாசஞ்சர் ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் வராமல் சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது.

அப்போது சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையத்தில் ரெயில் நிலைய மேலாளர் ஒலி பெருக்கி மூலம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே தண்டவாளம் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பெங்களூரு பாசஞ்சர் ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் செல்லாது என அறிவித்தார்.

அப்போது சுமார் 70-க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயில் நிலைய மேலாளரிடம் ஜோலார்பேட்டை brல்வதற்காக தனி பஸ் வசதி செய்து தர வேண்டும் என வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து பெங்களூரு கோட்ட ரெயில்வே அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலைய மேலாளர் தெரிவித்தார். அதன் எதிரொலியாக அரசு பஸ் மூலம் பயணிகள் ஜோலார்பேட்டைக்கு செல்ல ரெயில்வே அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.

பகுதியாக ரத்து

இந்த நிலையில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய பாசஞ்சர் ரெயில் சோமநாயக்கன்பட்டி வரை பகுதியாக ரத்து செய்யப்படுவதாகவும் 2 மணியளவில் புறப்பட வேண்டிய ரெயில் சோமநாயக்கன்பட்டியில் இருந்த புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதனால் ஜோலார்பேட்டையிலிருந்து பாசஞ்சர் ரெயிலில் பெங்களூரு செல்ல வேண்டிய பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்