சோதனை முயற்சிக்கு பலன்: வேளச்சேரி எம்.ஆர்.டி.எஸ். சாலை-மேடவாக்கம் சாலையில் போக்குவரத்து மாற்றம் நிரந்தரம் - போக்குவரத்து போலீசார் அறிவிப்பு
சோதனை முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்ததால் வேளச்சேரி எம்.ஆர்.டி.எஸ். சாலை- மேடவாக்கம் சாலையில் போக்குவரத்து மாற்றம் நிரந்தரமாக்கப்பட்டு உள்ளது.
சென்னை போக்குவரத்து தெற்கு மாவட்ட போலீஸ்துறை சார்பில் மடிப்பாக்கம் போக்குவரத்து உட்கோட்டத்தில் பரங்கிமலை போக்குவரத்து போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மேடவாக்கம் பிரதான சாலை- வேளச்சேரி எம்.ஆர்.டி.எஸ். சாலை சந்திப்பு உள் செல்லும் சாலை மற்றும் வெளி செல்லும் சாலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் வாகன சுரங்கப்பாதை அமைக்கும் பணி, மெட்ரோ ரெயில் தூண் அமைக்கும் பணி நடைபெற இருக்கிறது.
இதையொட்டி இந்த சாலையில் போக்குவரத்து மாற்றம் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சோதனை ஓட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தற்போது வாகனங்கள் எந்தவித இடையூறும் இன்றி இயங்கி வருகின்றன.
சோதனை முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்ததுடன், மாற்றுப்பாதையில் மாநகர பஸ்களை இயக்குவதற்கு அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
எனவே மாற்றுப்பாதையில் வாகன மாற்றம் 13-ந்தேதி (நாளை) முதல் நிரந்தரம் ஆக்கப்படும் என சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.