கம்பராயப்பெருமாள் கோவிலுக்கு சொந்தமான கடைகள், வீடுகளில் அளவீடு பணி
கம்பத்தில் கம்பராயப்பெருமாள் கோவிலுக்கு சொந்தமான கடைகள் மற்றும் கோவில்களில் அளவீடு பணி நடந்தது.
கம்பத்தில் கம்பராயப்பெருமாள், காசிவிஸ்வநாதர் சுவாமி, கவுமாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு சொந்தமான இடங்களில் வீடு மற்றும் கடைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த கடைகளுக்கு தரை வாடகை அடிப்படையில் வரி வசூலிக்கப்படுகிறது. இந்தநிலையில் வரி வசூல் செய்வதில் குளறுபடி உள்ளதாக இந்து அறநிலையத்துறைக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் கோவில் செயல் அலுவலர் சுரேஷ், அறநிலையத்துறை நில அளவையர்கள் சரவணன், அன்புராஜா, கோவில் பணியாளர்கள் கடைகள் மற்றும் வீடுகளில் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். வீடு மற்றும் கடை உரிமையாளர்கள் முன்னிலையில் அளவீடு பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கோவில் அலுவலர் கூறுகையில், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கம்பராயப்பெருமாள் கோவிலை சுற்றி 90 கடைகள், 186 வீடுகள் உள்ளன. இதில் கடைகள் மற்றும் வீடுகளில் நில அளவீடு மாறுபாடுகள் உள்ளதாக புகார்கள் வந்துள்ளது. அதன்பேரில் இந்து சமய அறநிலையத்துறையின் நில அளவையர் மூலம் கடை மற்றும் வீடுகள் அளவீடு செய்யப்பட்டு வருகின்றன. இதேபோல் அனுமதியின்றி கட்டுமானங்கள் குறித்து கணக்கெடுப்பு செய்து கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்றார்.