கலெக்டர் அலுவலகம் முன்பு வீட்டுமனைப்பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்

தேனி கலெக்டா் அலுவலகம் முன்பு வீட்டுமனைப்பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-11-28 18:45 GMT

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் அண்ணாமலை தலைமையில், அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் கம்பம் சுருளிப்பட்டி சாலையில் வசிக்கும் மக்கள் பலர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். கலெக்டர் அலுவலகம் முன்பு அவர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, சுருளிப்பட்டி சாலையில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் கலெக்டர் முரளிதரனிடம் அவர்கள் கொடுத்த மனுவில், "சுருளிப்பட்டி சாலையில் 60 ஆண்டுகளுக்கும் மேல் சொந்த சொத்துக்கள் இல்லாத நிலையில் ஏழை, எளிய மக்கள் வசித்து வருகின்றனர். இந்த வீடுகளை அப்புறப்படுத்த கம்பம் நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வயதான பெற்றோர்கள், குழந்தைகளுடன் வசித்து வரும் எங்களுக்கு நாங்கள் வசிக்கும் வீட்டுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தனர். அதுபோல், தமிழ்நாடு நாட்டு மாடுகள் நலச்சங்கம் சார்பில், மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு தடை கேட்டு பீட்டா அமைப்பு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் சங்க தலைவர் கலைவாணன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்