பீட்ரூட் சாகுபடி செய்யும் பணிகள் தீவிரம்

Update: 2022-11-29 15:53 GMT


குடிமங்கலம் பகுதியில் பீட்ரூட் சாகுபடி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பீட்ரூட் சாகுபடி

குடிமங்கலம் பகுதியில் சொட்டுநீர் பாசனம் மூலம் பீட்ரூட் சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது. பீட்ரூட் மலைப் பகுதிகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது சமவெளிப் பகுதிகளிலும் சாகுபடி செய்யப்படுகிறது. பீட்ரூட் சந்தைக்கு கொண்டு சென்றுவிற்பனை செய்வதற்கு வசதியாக வெவ்வேறு காலங்களில் அறுவடை செய்யும் வகையில் சில நாட்கள் இடைவெளி விட்டு விதைக்கப்படுகிறது.

பீட்ரூட் சாகுபடி செய்தால் 80 முதல் 90 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும் என்பதால் விவசாயிகள் பீட்ரூட் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பீட்ரூட் சாகுபடி செய்வது குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது.

குறுகிய காலப் பயிர்

குடிமங்கலம் பகுதியில் கிணற்றுப்பாசனம் மூலம் பீட்ரூட் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம். ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய 2 கிலோ விதை தேவைப்படுகிறது. ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய உழவு, களை எடுத்தல், மருந்து தெளித்தல் உரமிடுதல் அறுவடை செய்தல் என ஏக்கருக்கு 45 ஆயிரம் வரை செலவாகிறது. கோடைகாலங்களில் பீட்ரூட் மகசூல் குறைந்தும் குளிர்காலத்தில் மகசூல் அதிகரித்தும் காணப்படுகிறது.

ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 10 டன் வரை மகசூல் கொடுக்கும். கடந்த காலங்களில் ஒரு கிலோவிற்கு சராசரியாக 15 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. வியாபாரிகள் தோட்டங்களுக்குள் நேரடியாக வந்து அறுவடை செய்து கழுவி சுத்தம் செய்து பைகளில் அடைத்து எடுத்துச்செல்கிறார்கள். இங்கு உற்பத்தி செய்யப்படும் பீட்ரூட் உடுமலை, பொள்ளாச்சி மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. பீட்ரூட் சாகுபடி விவசாயிகளுக்கு சராசரியாக நல்ல விலை கிடைத்து வருகிறது இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்