மாணவர்களுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரியில் மாணவர்களுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
பெரியகுளம் அரசு தோட்டக்கலை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிர் பாதுகாப்பு துறை சார்பில் உலக தேனீக்கள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம், கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் ராஜாங்கம் தலைமை தாங்கி, பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், உழவு தொழிலின் தேவதைகளான தேனீக்கள் குறித்தும், பயிர் மகசூலை அதிகரிப்பதில் அதன் பங்கு குறித்தும் பேசினார். பயிர் பாதுகாப்புத்துறை தலைவர் முத்தையா கலந்துகொண்டு பேசும்போது, தேனீக்களின் வகைகள் மற்றும் மாணவர்கள் தேனீ வளர்ப்பு மூலம் தொழில் முனைவோராகும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார்.
மேலும் தேனீக்கள் மேலாண்மை முறைகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் தெளிப்பதால் வரும் பாதிப்புகள், அதனை குறைக்கும் வழி முறைகள் ஆகியவை குறித்து பூச்சியியல் துறை இணை பேராசிரியர் சுகன்யா கண்ணா விளக்கமளித்து பேசினார். இந்த பயிற்சி முகாமில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். முடிவில் தேனீ வளர்ப்பில் உள்ள சந்தேகங்களுக்கு பேராசிரியர்கள் பதில் அளித்து பேசினர்.