படுக்கை வசதி கொண்ட 'வந்தே பாரத்' ரெயில்கள் அடுத்த ஆண்டு ஓடும் -ஐ.சி.எப். பொதுமேலாளர் தகவல்
படுக்கை வசதி கொண்ட ‘வந்தே பாரத்’ ரெயில்கள் அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என ஐ.சி.எப். பொதுமேலாளர் மால்யா தெரிவித்தார்.
சென்னை,
சென்னை பெரம்பூர் ஐ.சி.எப்., ஆலையில் 77-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பொதுமேலாளர் மால்யா தேசியக்கொடியை ஏற்றி வைத்து, பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இந்த விழாவில் ஐ.சி.எப் அதிகாரிகள், பணியாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில் பொதுமேலாளர் மால்யா பேசியதாவது:-
வந்தே பாரத்
ரெயில்வே வாரியம் நிர்ணயித்த இலக்கின்படி கடந்த ஆண்டில் 2 ஆயிரத்து 261 எல்.எச்.பி. வகை பெட்டிகள் உள்பட 2 ஆயிரத்து 702 ரெயில் பெட்டிகளை பெரம்பூர் ஐ.சி.எப். தயாரித்துள்ளது. இந்த ஆண்டில் 3 ஆயிரத்து 241 ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளன. இதில் 30 வந்தே பாரத் ரெயில்களும் அடங்கும்.
வந்தே பாரத் ரெயிலை போன்ற வசதிகளை கொண்ட, குளிர்சாதன வசதி இல்லாத சாதாரண கட்டண ரெயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்களில் முன்புறமும், பின்புறமும் என்ஜின்கள் பொருத்தப்பட்டு இருக்கும். இதனால் இந்த ரெயிலை வேகமாக இயக்க முடியும்.
படுக்கை வசதி
இதேபோல் வந்தே மெட்ரோ ரெயில்கள் வரும் டிசம்பர் மாதத்துக்குள் தயாரிக்க உள்ளோம். தானியங்கி கதவுகள் உள்பட பல்வேறு வசதிகள் இதில் இருக்கும். நீண்ட தூர பயணத்திற்கான படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில் அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் தயாரித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர உள்ளோம்.
மேலும், எளிதில் அழுகக்கூடிய பொருட்களை பாதுகாப்பாகவும், விரைவாகவும் கொண்டு செல்லும் வகையில் குளிர்சாதன வசதி கொண்ட கதி சக்தி சரக்கு ரெயில்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் ரெயில் தடத்தில் விரைவாக பயணிக்க உதவும் வந்தே பாரத் ரெயில்களை சிறப்பு வடிவமைப்புடன் தயாரிக்க உள்ளோம். இந்த ரெயிலில் நீர் குழாய்கள் உறைந்து வெடிக்காமல் இருக்க சிறப்பு அமைப்புகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் குளிர்காலத்தில் பயணிகள் வசதியாக பயணிக்க வெப்ப அமைப்பும் இருக்கும். இந்த ரெயில் அடுத்த ஆண்டு தயாரிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.