'உணவுக்குகூட வழியில்லாததால் 3 மாதத்தில் தற்கொலை செய்து கொள்வேன்' மாவட்ட வருவாய் அதிகாரியிடம் முதியவர் மனு

மாவட்ட வருவாய் அதிகாரியிடம் முதியவர் மனு

Update: 2022-10-31 19:30 GMT

'உணவுக்குகூட வழியில்லாததால் 3 மாதத்தில் தற்கொலை செய்து கொள்வேன்' என்று மாவட்ட வருவாய் அதிகாரியிடம் முதியவர் மனு கொடுத்தார்.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

சேலம் மாவட்டம் தேவண்ணகவுண்டனூரை சேர்ந்தவர் செல்லப்பன் (வயது 75) என்பவர் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-

விபத்தில் இரு கால்களிலும் எனக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைபெற்று இரும்பு வளைவுடன் கூடிய ஊன்று கோல் உதவியுடன் நடமாடி வருகிறேன். உறவினர்கள் என்னை கைவிட்டுவிட்டனர். நடக்க முடியாததால் 100 நாள் வேலையும் வழங்கப்படவில்லை. மேலும் மாதம்தோறும் வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 முதியோர் உதவித்தொகையும் நிறுத்தப்பட்டு விட்டது.

தற்கொலை

கடந்த 2 ஆண்டுகளாக மொடக்குறிச்சி பகுதியில் தங்கியிருந்து யாசகம் பெற்று வாழ்ந்து வருகிறேன். வேலை செய்ய உடல் ஒத்துழைக்கவில்லை. இதனால் உணவுகூட கிடைக்காமல் கஷ்டப்படுகிறேன். இதே நிலை நீடித்தால் 3 மாதத்துக்குள் தற்கொலை செய்து கொள்வேன். எனக்கு 3 சக்கர சைக்கிள், காது கேட்கும் கருவி, உதவித்தொகை வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.

இதைத்தொடர்ந்து அவரிடம் நேரில் விசாரணை நடத்திய ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோதைசெல்வி தனியார் காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்தார்.

நிவாரணம்

அந்தியூர் தவுட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் தனது மனைவி ராஜேஸ்வரியுடன் வந்து கொடுத்திருந்த மனுவில், 'தவுட்டுப்பாளையம் அரசு பள்ளிக்கூடத்தில் படித்த எனது மகன் ராகவன், நண்பர்கள் நந்தகிஷோர், சிபினேஷ் ஆகியோர் கடந்த மாதம் 10-ந்தேதி நாட்ராயன் நகர் பகுதியில் பயன்பாடு இல்லாத கல்குவாரி குட்டையில் மூழ்கி உயிரிழந்தனர்.

பயன்பாடு இல்லாத இந்த கல்குவாரி குட்டைக்கு செல்ல முடியாதவாறு தடுப்பு வேலி அமைக்காததால் 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதனால் சம்பந்தப்பட்ட கல்குவாரி குத்தகைதாரர் மீது நடவடிக்கை எடுத்து இறந்த குழந்தைகளின் பெற்றோருக்கு நிவாரணம் பெற்றுத்தர வேண்டும்' என்று கூறி இருந்தார்.

262 மனுக்கள்

சிவகிரி மாரப்பாளையம் பகுதியை சேர்ந்த வரதராஜ் என்பவர் கொடுத்திருந்த மனுவில், 'நான் சிவகிரி பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறேன். எனக்கு உடல் நிலை சரியில்லாததால் கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லவில்லை. இதனால் வி.ஆர்.எஸ். வாங்கிக்கொண்டு வேலையைவிட்டு நின்று விடுமாறு கூறுகிறார்கள். எனவே எனக்கு தொடர்ந்து பணி வழங்க ஆவணம் செய்ய வேண்டும்' என்று கூறி இருந்தார்.

பெருந்துறை வள்ளிபுரத்தான்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வீட்டு மனை பட்டா வேண்டி மனு கொடுத்தனர். இதேபோல் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 262 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி அதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்