ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்;மலை ரெயிலில் ஆர்வமாக பயணித்தனர்
இதமான காலநிலை நிலவுவதால் ஊட்டியில் நேற்று சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. மேலும் அவர்கள் மலைரெயிலில் ஆர்வமாக பயணித்து மகிழ்ச்சி அடைந்தனர்.
ஊட்டி: இதமான காலநிலை நிலவுவதால் ஊட்டியில் நேற்று சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. மேலும் அவர்கள் மலைரெயிலில் ஆர்வமாக பயணித்து மகிழ்ச்சி அடைந்தனர்.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் முதல் சுற்றுலா சீசனும், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இரண்டாவது சுற்றுலா சீசனும் நடக்கிறது. இந்த சீசன் காலங்களில் நீலகிரிக்கு தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த சுமார் 30 லட்சம் பேர், ஓராண்டு காலகட்டத்திற்குள் வந்து செல்கின்றனர். இதற்கிடையே தென்மேற்கு பருவமழை ஆகஸ்டு மாதத்தில் அதிக அளவில் பெய்யும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக மழை இல்லை. மேலும் இதமான காலநிலை நிலவுதால் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் உள்ளது.
இந்த நிலையில் வார விடுமுறை நாளான நேற்றுமுன்தினமும், நேற்றும் நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
மலைரெயிலில் பயணம் செய்ய ஆர்வம்
குறிப்பாக ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் காணப்பட்டனர். அவர்களில் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மலைரெயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டினர். அதன்படி அவர்கள் மலைரெயிலில் பயணம் செய்து மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மலைரெயில் முன்பு நின்று செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து கொண்டனர். தாவரவியல் பூங்காவிற்கு சென்ற சுற்றுலா பயணிகள் புல் தரையில் அமர்ந்து நீண்ட நேரம் பொழுது போக்கினர். மேலும் இத்தாலியன் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல் படகு இல்லத்தில் மிதி படகு, மோட்டார் படகு போன்றவற்றில் படகு சவாரி செய்து புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியடைந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக ஊட்டியில் முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல் குன்னூர் சிம்ஸ் பூங்கா, கேத்தரின் நீர்வீழ்ச்சி, காட்டேரி பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.