கலங்கலாக வருவதால்குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்:நகராட்சி ஆணையர் தகவல்
தேனியில் குடநீர் கலங்கலாக வருவதால் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்று தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு வைகை ஆற்றில் இருந்து நீர் எடுக்கப்பட்டு குருவியம்மாள்புரத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படுகிறது. அதில் குளோரின் சேர்த்து குழாய் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் ஏற்றி, 33 வார்டுகளுக்கும் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது வைகை அணை நீர்மட்டம் குறைந்துள்ளதால் நீரானது மிகவும் கலங்கலாக வருகிறது. இதனால், நகராட்சி மூலம் வினியோகம் செய்யப்படும் குடிநீரை பொதுமக்கள் காய்ச்சி குடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.