பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் தற்கொலைக்கு முயன்ற பிளஸ்-2 மாணவி

பாலியல் பலாத்காரம்

Update: 2022-08-10 17:53 GMT

சத்தியமங்கலத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் பிளஸ்-2 மாணவி தற்கொலைக்கு முயன்றார். இது தொடர்பாக போக்சோவில் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

பாலியல் பலாத்காரம்

சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி பிளஸ்-2 படித்து வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த 6-ந் தேதி காலை 9 மணி அளவில் பள்ளிக்கூடத்தில் சிறப்பு வகுப்பு இருப்பதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் பள்ளிக்கூடத்துக்கு சென்று விசாரித்தபோது சிறப்பு வகுப்பு எதுவும் நடைபெறவில்லை என்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து மாணவியை தேடிப்பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை.இந்த நிலையில் மதியம் வீட்டுக்கு வந்த மாணவியிடம் பெற்றோர் இதுபற்றி கேட்டனர். அப்போது அவர் கோபி அருகே உள்ள புஞ்சைதுறைபாளையத்தை சேர்ந்த டிரைவரான பிரசாத் மணிகண்டன் (வயது 22) என்பவர் தன்னை பவானிசாகருக்கு அழைத்து சென்றதாகவும், அங்கே ஒரு மறைவான இடத்தில் வைத்து தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தற்கொலை முயற்சி

இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இந்தநிலையில் அவமானம் தாங்காமல் மாணவி நேற்று முன்தினம் வீட்டில் மண்எண்ணெயை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு் சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பிரசாத் மணிகண்டன் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஈரோடு மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோபி சிறையில் அடைக்கப்பட்டார்.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்