பெரும்பாக்கம் திட்டப்பகுதியில் 30 பெண்களுக்கு அழகுகலை நிபுணர் சான்றிதழ் - அமைச்சர் தா.மோ. அன்பரசன் வழங்கினார்

சென்னை பெரும்பாக்கம் திட்டப்பகுதிகளில் திறன் மேம்பாட்டு கழகம் மூலம் அழகுக்கலை நிபுணர் பயிற்சி பெற்ற 30 பெண்களுக்கு சான்றிதழை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.

Update: 2023-01-06 09:02 GMT

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் பெரும்பாக்கம் திட்டப்பகுதிகளில் திறன் மேம்பாட்டு கழகம் மூலம் இலகுரக ஓட்டுனர் பயிற்சி பெற்ற 81 இளைஞர்களுக்கு டிரைவிங் லைசென்சு, அழகுக்கலை நிபுணர் பயிற்சி பெற்ற 30 பேருக்கு சான்றிதழ்களையும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.

விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:-

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு திட்டப்பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களின் வாழ்வாதாரத்துக்காக பல்வேறு திறன் பயிற்சிகள் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றது.

இலகுரக ஓட்டுனர் பயிற்சி, அழகுக்கலை நிபுணர், ஆயத்த ஆடைகள் தயாரிப்பு பயிற்சி, ஜெனரல் டூட்டி அஸிஸ்டென்ட் போன்ற பயிற்சிகள் 361 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் 183 நபர்களுக்கு கணினி பயிற்சி, தையல் பயிற்சி, மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் பயிற்சி போன்ற 18 விதமான பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.

இதனைத்தவிர தொண்டு நிறுவனங்களின் மூலம் 22 விதமான பல்வேறு பயிற்சிகள் 1,324 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் இதுவரை 1,868 இளைஞர்கள் திறன் வளர்ப்பு பயிற்சியில் பயனடைந்துள்ளனர்.

தற்போது 107 நபர்கள் 4 விதமான பயிற்சிகளில் பயின்று வருகின்றனர். மேலும் பல்வேறு பிரிவுகளில் திறன் வளர்ப்பு பயிற்சிகள் பெற 6 ஆயிரத்து 358 நபர்கள் வாரிய திட்டப்பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளனர்.

பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் பெற இப்பயிற்சி வழிவகை செய்கின்றது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் அபூர்வா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் கோவிந்த ராவ், சோழிங்கநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.அரவிந்த் ரமேஷ், வாரியத்தின் என்ஜினீயர்கள் சுந்தரராஜன் (தலைமை), மாலா (மேற்பார்வை), சிவசங்கரன் (நிர்வாகம்) மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்