கோத்தகிரி அருகே குடியிருப்புகளில் தொடர்ந்து உலா வரும் கரடிகள்- அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை

கோத்தகிரி அருகே குடியிருப்புகளில் தொடர்ந்து உலா வரும் கரடிகள்- அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை

Update: 2022-10-07 18:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரியில் இருந்து அரவேனு வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் சாலை பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலையில் அரவேனு பகுதியை இணைக்கும் மாற்று சாலையாக கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் இருந்து கோட்டாஹால் வழியாக அரவேனு செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் உள்ள பெரியார் நகர் கிராமத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்தப் பகுதி வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியாக உள்ளதால் இங்குள்ள தேயிலைத் தோட்டங்கள் மற்றும் சாலையில் கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அங்குள்ள சாலை மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் கரடிகள் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் தொடர்ந்து நடமாடி வருகின்றன. இந்த காட்சிகள் அங்குள்ள வீடு ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன.

இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதே பகுதியில் கடந்த மாதம் 2 சிறுத்தைகள், 2 கருஞ் சிறுத்தைகள் மற்றும் 2 கரடிகள் உலா வந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் பெரும் அச்சமடைந்ததுடன், சிறுத்தைகள், கரடிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்