குடியிருப்பு நடைபாதையில் 2 குட்டிகளுடன் உலா வந்த கரடி
கோத்தகிரி அருகே குடியிருப்பு நடைபாதையில் 2 குட்டிகளுடன் உலா வந்த கரடியால் பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே கன்னிகா தேவி காலனி, பேரூராட்சி வளம் மீட்பு பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் கரடி நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் கன்னிகாதேவி காலனி பகுதியில் தேயிலை தோட்டத்தை ஒட்டியுள்ள நடைபாதையில் 2 குட்டிகளுடன் கரடி நடமாடியது. அந்த கரடி 2 குட்டிகளை முதுகில் சுமந்தபடி சென்றது. இதனால் தோட்டத்தில் பச்சை தேயிலை பறித்து கொண்டிருந்த தொழிலாளர்கள், அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் சத்தம் போட்டு கரடியை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் கரடி அருகே உள்ள தேயிலை தோட்டம் வழியாக வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எனவே, குடியிருப்பு மற்றும் தேயிலை தோட்டங்களில் உலா வரும் கரடிகளை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.