ஊட்டி குடியிருப்பில் கரடி நடமாட்டம்

ஊட்டி நகரின் குடியிருப்பில் நள்ளிரவில் கரடி ஒன்று நடமாடியது. இதனால பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

Update: 2022-06-12 14:31 GMT

ஊட்டி, 

ஊட்டி நகரின் குடியிருப்பில் நள்ளிரவில் கரடி ஒன்று நடமாடியது. இதனால பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

கரடி புகுந்தது

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரை சுற்றி தொட்டபெட்டா, கேர்ன்ஹில் உள்ளிட்ட வனப்பகுதிகளில் காட்டெருமை, கடமான், சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி, ஊட்டி நகரின் மையப்பகுதியான மார்க்கெட் அருகே உள்ள புது அக்ரஹாரம் தெருவில் புகுந்து நடமாடியது. வீடுகள் முன்பு நள்ளிரவில் கரடி உலா வந்தது. கரடியை கண்ட தெரு நாய்கள் குரைத்தபடி, அங்குமிங்கும் ஓடியது.

சத்தம் கேட்ட மக்கள் சிலர் வெளியே வந்த போது, கரடியை நடமாடியதை பார்த்து பீதி அடைந்தனர். பின்னர் கரடி எட்டின்ஸ் சாலை உள்ளிட்ட பகுதிகள் வழியாக நடமாடியது. அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. கரடி நடமாடிய காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது

பொதுமக்கள் அச்சம்

ஊட்டி குடியிருப்பில் கரடி நடமாடியது அதிர்ச்சி அளிக்கிறது. வெளியூர் செல்பவர்கள், இரவு பணி முடிந்து வீடு திரும்புபவர்கள் அச்சம் அடைந்து உள்ளனர். வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி நகருக்குள் வந்து இருக்கலாம். கடந்த சில மாதங்களுக்கு சிறுத்தை வந்து நாய்களை கவ்வி சென்றது. அப்போது தெருவில் ரத்த கறை படித்து இருந்தது.

எனவே, வனத்துறையினர் கரடி நடமாட்டத்தை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்றனர். தகவலறிந்த வனத்துறையினர் நேற்று புது அக்ரகாரம் பகுதிக்கு வந்து மக்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் கரடி நடமாட்டம் இருந்தால், தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்