நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் விரைவில் "பே வார்டு" திட்டம்

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் விரைவில் “பே வார்டு” திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Update: 2023-06-05 20:04 GMT

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் ரூ.23.75 கோடியில் அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசியதாவது:-

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் புற்றுநோயை கண்டறியும் 'பெட் ஸ்கேன்' என்ற மையம் திறக்கப்பட்டு உள்ளது. புற்றுநோயை துல்லியமாக கண்டறிய வேண்டும் என்றால் மதுரைக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. தற்போது அந்த நிலை மாறியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 2099 புதிய படுக்கைகளை அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு முதல்-அமைச்சர் வழங்கினார். அதில் 20 படுக்கைகள் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் உள்ளது.

"பே வார்டு" திட்டம்

ரூ.237.50 கோடி மதிப்பில் செங்கல்பட்டு, தர்மபுரி, திருவாரூர், நெல்லை, சிவகங்கை உள்ளிட்ட 6 அரசு ஆஸ்பத்திரிகளில் தலா 50 படுக்கை வசதிகள் கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தற்போது நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் ரூ.23.75 கோடியில் அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்ட பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதேபோல் இந்த ஆஸ்பத்திரிக்கு ரூ.80 லட்சத்தில் நரம்பியல் சிகிச்சைக்கான உபகரணங்களும், தாய்ப்பால் வங்கிகளுக்கு ரூ.2.61 கோடியில் நவீன மருத்துவ உபகரணங்களும் விரைவில் வழங்கப்பட உள்ளன.

சேலம், கோவை, மதுரை ஆகிய 3 அரசு ஆஸ்பத்திரிகளில் குறைந்த கட்டணத்தில் அதிக வசதிகளுடன் "பே வார்டு" திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி சேலம், மதுரையில் திறக்கப்பட்டு உள்ளது. கோவையில் விரைவில் திறக்கப்பட உள்ளது. மேலும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியிலும் விரைவில் பே வார்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

சென்னை மருத்துவக்கல்லூரி முதலிடம்

சென்னையில் ஒரே ஒரு அரசு பல் மருத்துவக்கல்லூரி உள்ளது. 70 ஆண்டுகளுக்கு பிறகு முதல்-அமைச்சர் முயற்சியால் மத்திய அரசு புதுக்கோட்டையில் ஒரு பல் மருத்துவக்கல்லூரி அமைக்க அனுமதி வழங்கி உள்ளது. தமிழகத்தில் செவிலியர் பயிற்சி கல்லூரி 25 மட்டுமே உள்ளன. 2 மாதங்களுக்கு முன்பு மத்திய அரசிடம் 30 கல்லூரிகள் கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் 11-க்கு மட்டுமே அனுமதி வழங்கி உள்ளது. அவை தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மருத்துவக்கல்லூரிகளில் அமைய உள்ளன. அடுத்த ஆண்டுகளில் கூடுதலாக அனுமதி கிடைத்தால் அது வள்ளியூரில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்திய அரசின் கல்வித்துறை சார்பாக ஆய்வு செய்யப்பட்டு வெளியிடப்பட்ட தர வரிசை பட்டியலில் இந்த ஆண்டு சென்னை மருத்துவக்கல்லூரி அகில இந்திய அளவில் 11-வது இடத்தை பிடித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மாநில அரசுகளால் நடத்தப்படும் மருத்துவக்கல்லூரிகளில் இந்த கல்லூரி முதல் இடத்தை பிடித்து உள்ளது. இது தமிழ்நாட்டுக்கு பெருமை ஆகும்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசின் சார்பில் அதிகாரிகள் ஆய்வு செய்து கண்காணிப்பு கேமரா, பயோமெட்ரிக் சிஸ்டம் சரியில்லை என்று கூறி 3 அரசு மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று கடிதம் அனுப்பினர். அதற்கு பதில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அரசு ஆஸ்பத்திரிகளில் இதுபோன்ற சிறுசிறு குறைகளுக்கு மத்திய அரசு அறிக்கை தரக்கூடாது என்பதை வலியுறுத்த மத்திய மந்திரியை விரைவில் சந்தித்து பேச உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் ஞானதிரவியம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அப்துல்வகாப், நயினார் நாகேந்திரன், மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, மருத்துவக்கல்லூரி முதல்வர் ரேவதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்