கள்ளழகர் கோவிலில் பவித்ர அபிஷேகம்
கள்ளழகர் கோவிலில் பவித்ர அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அழகர்கோவில்,
கள்ளழகர் கோவிலில் பவித்ர அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கள்ளழகர் கோவில்
மதுரை அருகே அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நிறை நாளில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் பவித்ர திருவிழா நடைபெறுவது உண்டு.
அதன்படி நேற்று காலையில் மூலவர் சன்னதி முன்பாக உள்ள அலங்கார மண்டபத்தின் முன்பாக கள்ளழகர் பெருமாள், எழுந்தருளினார். தொடர்ந்து அங்கு தயார் நிலையில் 108 வெள்ளி கலசங்கள் நூபுர கங்கை புனித தீர்த்தத்துடன் வரிசைபடுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த கலசத்தின் மீது தேங்காய், பழம், தாம்பூலம், வண்ணப்பூக்கள், மாவிலைகள், இணைத்து அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அபிஷேகம்
இதை தொடர்ந்து உற்சவர் கள்ளழகர் சுந்தரராஜ பெருமாளுக்கு, 136 வகையான வாசனை திரவியங்கள், மூலிகைகள் இணைந்த பூஜைகள் நடந்தது. மேலும் நெய், தேன், பால், புஷ்பம், இளநீர், மஞ்சள், துளசி, உள்ளிட்ட 36 வகையான பொருட்களுடன், அபிஷேகங்களும், நூபுர கங்கை தீர்த்தத்துடன் திருமஞ்சனமும் நடந்தது. பின்னர் சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் பட்டர்களின் வேத மந்திரங்களுடன் தங்க குடத்தினாலும் அபிஷேகமும் நடந்தது. அதன் பின்னர் சர்வ அலங்காரத்தில் கள்ளழகர் பெருமாள் காட்சி தந்தார்.
பின்னர் மாலையில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பின்னர் மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் சுவாமி புறப்பாடாகி சென்று ேகாவிலுக்குள் போய் இருப்பிடம் சேர்ந்தது.
நெய்விளக்கு ஏற்றி வழிபாடு
முன்னதாக பூஜையில் வைக்கப்பட்டிருந்த திருப்பவுத்திர பட்டு நூல் வண்ண மாலைகள் மூலவர் ஸ்ரீதேவி, பூமிதேவி, சமேத சுந்தர ராஜ பெருமாளுக்கும் மற்றும் கல்யாணசுந்தரவல்லி தாயார், ஆண்டாளுக்கும் அணிவிக்கப்பட்டது.இந்த விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்து நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து 28, 29, 30 ஆகிய தேதிகளிலும் இந்த திருவிழா சுவாமி புறப்பாடு நடைபெறும். இந்த பவித்ர திருவிழா வருகிற 31-ந் தேதி பவுர்ணமி நிறை நாளில் நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.