மலைவாழ் மக்களின் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல பேட்டரி வாகனம்

ஆனைமலை அருகே மலைவாழ் மக்களின் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல பேட்டரி வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-06-15 13:44 GMT

பொள்ளாச்சி

ஆனைமலை அருகே மலைவாழ் மக்களின் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல பேட்டரி வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

பேட்டரி வாகனம்

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் சர்க்கார்பதி, பழைய சர்க்கார்பதி, கோழிகமுத்தி, கூமாட்டி, எருமபாறை, கல்லார்குடி உள்பட 17 மலைவாழ் கிராமங்கள் உள்ளன. இதில் பொள்ளாச்சி, உலாந்தி வனச்சரகத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களின் குழந்தைகள் உயர்கல்விற்கு சேத்துமடை, வேட்டைக்காரன்புதூர் அரசு பள்ளிக்கு வருகின்றனர்.

இந்த நிலையில் பழைய சர்க்கார்பதி, நாகூரூத்து, தம்மம்பதியை சேர்ந்த 34 மாணவ-மாணவிகள் வாகன வசதி இல்லாததால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவில்லை. மேலும் அவர்களது கல்வி தடைபடும் சூழல் உருவானது. இதை கருத்தில் கொண்டு தன்னார்வலர்கள் உதவியுடன் பழைய சர்க்கார்பதி கிராமத்துக்கு பேட்டரி வாகனம் வழங்கப்பட்டு உள்ளது.

பயன்படுத்த பயிற்சி

இந்த வாகன சேவையை இன்று ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேசன் தொடங்கி வைத்தார். பின்னர் அந்த வாகனத்தில் மாணவ-மாணவிகளுடன் சிறிது தூரம் பயணம் செய்தார். இதில் உதவி வன பாதுகாவலர் செல்வம், வனச்சரகர் புகழேந்தி, வனவர்கள் முருகேசன், திலகர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேசன் கூறியதாவது:-

தனியார் தொண்டு நிறுவனங்களின் சி.எஸ்.ஆர். திட்டத்தில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் செலவில் புதிதாக பேட்டரி வாகனம் வழங்கப்பட்டு உள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 60 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும். குறைந்தபட்சம் 12 குழந்தைகள் வரை பயணிக்கலாம். சார்ஜ் போடுவது, வாகனத்தை பயன்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

மலைக்கிராம இளைஞர்களே குழந்தைகளை பள்ளியில் கொண்டு விடுவதற்கு, அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மருத்துவ தேவைகளுக்கும் அந்த வாகனத்தை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

கூடுதல் வாகனம்

இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறியதாவது:-

பழைய சர்க்கார்பதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு வரை குழந்தைகள் படிக்கின்றனர். அதற்கு மேல் படிக்க சேத்துமடை, வேட்டைக்காரன்புதூர் அரசு பள்ளிகளுக்கு செல்ல வேண்டி உள்ளது. இதற்கு முன்பு கல்வித்துறை அதிகாரிகள் ஆட்டோ மூலம் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்றனர். அதன்பிறகு அந்த திட்டத்தையும் கைவிட்டு விட்டனர். பின்னர் பெற்றோர்கள் சேர்ந்து ஆட்டோவில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வருகிறோம். இதற்கு வாரத்திற்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.120 வரை செலவாகிறது. கூலி வேலைக்கு செல்லும் எங்களால் ஆட்டோவிற்கு குறிப்பிட்ட தொகையை ஒதுக்க சிரமமாக உள்ளது. இதனால் சிலர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு தயங்குகின்றனர். தற்போது வனத்துறையினர் பேட்டரி வாகனம் ஏற்பாடு செய்து உள்ளனர். இதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இங்கிருந்து சேத்துமடை பள்ளிக்கு 24 குழந்தைகள் சென்று வருகின்றனர். அந்த வாகனத்தில் 15 குழந்தைகள்தான் செல்ல முடிகிறது. எனவே கூடுதலாக வாகன ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்