அடிப்படை பிரச்சினைகள் உடனே தீர்க்கப்படும்
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அடிப்படை பிரச்சினைகளை உடனே தீர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மேயர் சங்கீதா இன்பம் தெரிவித்தார்.
சிவகாசி,
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அடிப்படை பிரச்சினைகளை உடனே தீர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மேயர் சங்கீதா இன்பம் தெரிவித்தார்.
மாநகராட்சி கூட்டம்
சிவகாசி மாநகராட்சியின் சாதாரண கூட்டம் மேயர் சங்கீதா இன்பம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 143 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் தீர்மானங்கள் மீது விவாதம் நடைபெற்றது. இதில் கவுன்சிலர்கள் இந்திராதேவி, சேது ராமன், குருசாமி, மகேஸ்வரி, ஞானரஞ்சித், சூரியா, ரவிசங்கர், தன லட்சுமிகாசி, தங்கபாண்டியம்மாள் ஆகியோர் தங்கள் பகுதியில் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைக்க கோரினர்.
முக்கியத்துவம்
இதற்கு பதில் அளித்து மேயர் சங்கீதா இன்பம் பேசியதாவது:-
சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் போதிய வளர்ச்சி பணிகள் செய்யாத நிலையில் நாம் பதவி ஏற்ற பின்னர்தான் வளர்ச்சி பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கி செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அவசியமாக செய்யப்பட வேண்டிய பணிகளுக்கு தற்போது முக்கியத்துவம் தரப்பட்டு செய்யப்படுகிறது.
செய்யப்படாத அடிப்படை பிரச்சினைகளை வரும் நாட்களில் கூடுதல் கவனம் செலுத்தி செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய பணிகள் குறித்த திட்ட அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கிய பின்னர் பணிகள் விரைவாக செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேயருக்கு நன்றி
நகரின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து கவுன்சிலர்கள் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லும் போது அதிகாரிகள் அந்த பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து குறைகளை தீர்க்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணை மேயர் விக்னேஷ் பிரியா காளிராஜன், அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் பேசிய ம.தி.மு.க. கவுன்சிலர் ராஜேஷ், மாநகராட்சிக்கு புதிய அலுவலகம் அமைய நடவடிக்கை எடுத்த மேயருக்கும், துணைமேயருக்கும், கமிஷனருக்கும் நன்றி தெரிவித்தார்.