சொந்த ஊரான கூவனூரை தத்தெடுத்து அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்
சொந்த ஊரான கூவனூரை தத்தெடுத்து அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் அமைச்சர் எ.வ.வேலு தகவல்
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள கூவனூர் கிராமத்துக்கு அமைச்சர் எ.வ.வேலு வருகை தந்தார். தனது சொந்த ஊரான இந்த கிராமத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று சுற்றிப்பார்த்த அமைச்சர் எ.வ.வேலு, அக்கிராம மக்களிடம் குறைகளை கேட்றிந்தார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், கூவனூர் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் திருக்கோவிலூருக்கு செல்வதாக இருந்தால் மணலூர்பேட்டை அல்லது தகடி வழியாக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும். இதை எளிமைப்படுத்தும் வகையில் கூவனூரையும்-சித்தாமூரையும் இணைக்கும் வகையில் திருக்கோவிலூருக்கும், மணலூர்பேட்டைக்கும் இடையே உள்ள தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க முதல்-அமைச்சரிடம் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
கூவனூர் கிராமத்தை தத்தெடுத்துக்கொண்டு அனைத்து தெருக்களுக்கும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
தொடர்ந்து ரிஷிவந்தியம் ஒன்றிய பா.ஜ.க. செயலாளர் அறிவழகன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் அக்கட்சியிலிருந்து விலகி அமைச்சர் எ.வ.வேலு, வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
முன்னதாக சொந்த ஊருக்கு வந்த அமைச்சரை தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர் வாணவெடிகளுடன், மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து வந்தனர். மேலும் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.