திப்பம்பட்டி தொழிலாளர் காலனிக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்-சப்-கலெக்டரிடம், குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மனு

திப்பம்பட்டி தொழிலாளர் காலனிக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று சப்-கலெக்டரிடம் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மனு கொடுத்தனர்.

Update: 2023-04-17 18:45 GMT

 பொள்ளாச்சி

திப்பம்பட்டி தொழிலாளர் காலனிக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று சப்-கலெக்டரிடம் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மனு கொடுத்தனர்.

அடிப்படை வசதி

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அப்போது திப்பம்பட்டி தொழிலாளர் காலனி குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் திப்பம்பட்டி ஊராட்சியில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறை மூலமாக 188 நபர்களுக்கு இலவசமாக பட்டா வழங்கப்பட்டது. தற்போது 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். அடிப்படை வசதியான குடிநீர் மற்றும் தெருவிளக்கு, தார் சாலை போன்ற வசதிகள் கடந்த 10 ஆண்டுகளாக ஏற்படுத்தப்படவில்லை.

ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை தொட்டி கட்டப்பட்டு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. தற்போது பராமரிப்பு இல்லாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன் ஜல் ஜீவன் திட்டத்தில் மீண்டும் ஒரு மேல்நிலை தொட்டி கட்டப்பட்டு உள்ளது. அதற்கு குடிநீர் இணைப்பு வழங்காமல் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் குடியிருக்கும் மக்கள் ஒரு குடம் தண்ணீர் ரூ.10 வாங்க வேண்டிய உள்ளது. வீட்டு உபயோகத்திற்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரத்திற்கு தண்ணீர் வாங்கி உபயோகத்தி கொண்டிருக்கிறோம். இதுகுறித்து ஏற்கனவே சப்-கலெக்டர். குடிநீர் வழங்கல் வாரியம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஊராட்சி நிர்வாகம் ஆகிய சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தொழிலாளர் காலனிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

சமுதாய கூடம்

அனைத்து கிறிஸ்தவ சட்ட உரிமைகள் நல கூட்டமைப்பினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் 160-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களில் உள்ள உறுப்பினர்கள் சுமார் 30 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலும் சமூக பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ளனர். இவர்கள் வீடுகளில் திருமணம், சீர் மற்றும் வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு இடவசதி இல்லாமலும், திருமண மண்டபங்களில் நடத்துவ்ற்கு பொருளாதார வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே கிறிஸ்தவ சிறுபான்மை மக்களுக்கு சமுதாய கூடம் அமைத்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


100 நாள் வேலை திட்டத்தில் பணி 

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட குள்ளிசெட்டிபாளையம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகள் நேற்று சப்-கலெக்டர் பிரியங்காவிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் 100 நாள் வேலை திட்டத்தில் சரிவர பணி வழங்குவதில்லை என்றும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து அதிகாரிகள், வடக்கு ஒன்றிய அலுவலகத்திற்கு பயனாளிகளை அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து அங்கு ஒன்றிய அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதுகுறித்து பயனாளிகள் கூறுகையில், குள்ளிசெட்டிபாளையம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் சரியாக பணி வழங்குவதில்லை. மேலும் பணி வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. இதனால் வேலை கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றோம். எனவே 100 நாள் வேலை திட்டத்தில் முறையாக பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்