தியாகராஜநகரில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும்; மேயரிடம், குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மனு

தியாகராஜநகரில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும் என்று மேயரிடம், குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மனு கொடுத்தனர்.

Update: 2023-02-07 19:03 GMT

தியாகராஜநகரில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும் என்று மேயரிடம், குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மனு கொடுத்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜு முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், தியாகராஜநகர் மல்லிகா காலனி குடியிருப்போர் நலச்சங்க தலைவர் குமாரவேல் தலைமையில் செயலாளர் பழனிச்செல்வி, பொருளாளர் பெரியநாயகம் ஆகியோர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

அடிப்படை வசதி

மாநகராட்சி 55-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான மல்லிகா காலனி உருவாகி 40 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. புறவழிச் சாலைக்கு அருகே இருப்பதால் திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. சாலை வசதி கேட்டால் பாதாள சாக்கடை பணிகள் முடிந்த பின்னரே பணிகள் நடைபெறும் என்று கூறிவிட்டனர். எங்களது தெருக்கள் குண்டும், குழியுமாக இருப்பதால் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்லக்கூட முடியாத நிலை உள்ளது. எங்களது பகுதியில் 19 மின்கம்பங்கள் உள்ளன. இதில் எந்த கம்பத்திலும் தெரு விளக்குகள் பொருத்தப்படவில்லை. இதனால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. சீரான குடிநீரும் கிடைக்கவில்லை.

எனவே உடனடியாக அந்த பகுதியை ஆய்வு செய்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரவேண்டும் என்று கூறிஇருந்தனர்.

குடிநீர் பிரச்சினை

திருநகர் நலச்சங்கத்தினர் கொடுத்த மனுவில், "மேலப்பாளையம் மண்டலம் 51-வது வார்டு மகிழ்ச்சி நகர் நீரேற்று நிலையம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. சில மாதங்களாக 7 நாட்களுக்கு 1 முறை மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது. இதை சரிசெய்து தினசரி தண்ணீர் கிடைக்க செய்ய வேண்டும்'' என்று கூறிஉள்ளனர்.

சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் கொடுத்த மனுவில், "பாளையங்கோட்டை மார்க்கெட் கட்டிடம் இடிக்கப்பட்டு, புதிய கடைகள் கட்டப்பட உள்ளது. இதற்காக 2 இடங்களில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் தொடர்பாக மாநகராட்சி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்'' என்று கூறிஉள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் முத்துசுப்பிரமணியன் கொடுத்த மனுவில், 55-வது வார்டு பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. மேலும் கடந்த 1 மாதமாக குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. இதற்கு உரிய தீர்வு காணவேண்டும்'' என்று கூறிஇருந்தார். மேலும் மனுக்கொடுக்க வந்த பெண் திடீரென்று மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் பல்வேறு பகுதி மக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்