அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்

அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று ஊட்டியில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மொரக்குட்டி காலனி மக்கள் மனு அளித்தனர்.

Update: 2022-08-01 14:04 GMT

ஊட்டி

அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று ஊட்டியில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மொரக்குட்டி காலனி மக்கள் மனு அளித்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி தலைமை தாங்கி மனுக்களை வாங்கி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

இதில் தலைக்குந்தா பகுதி பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

உல்லத்தி ஊராட்சியில் அழகர் மலை, காந்திநகர், எம்.ஜி.ஆர். நகர், கல்லட்டி, திருவள்ளுவர் நகர், நேரு நகர், நீத்தி, முத்தநாடு மந்து, கொம்பு தூக்கி மந்து, பாரஸ்ட் லைன் போன்ற பகுதிகளை இணைக்கும் பகுதியாக தலைகுந்தா உள்ளது. இங்குள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒப்பந்த பணிகள் செய்வதால் மக்கள் பணிகள் செய்வதில்லை. இதனால் இதுவரை தலைகுந்தாவில் கிராம சபை கூட்டம் நடத்தவில்லை. கடந்த முறை மேலூர் மற்றும் காரபில்லுவில் ஒரே வார்டில் 2 முறை கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால் கிராம சபை கூட்டம் குறித்த அறிவிப்பு முறையாக தெரிவிக்கப்படவில்லை.

கிராம சபை கூட்டம்

இதனால் தலைகுந்தாவில் மயான ஆக்கிரமிப்பு, அடிப்படை வசதிகள், தவனவிலங்குகள் தொல்ைல குறித்து விவாதிக்க முடிவதில்லை. எனவே வருகிற சுதந்திர தினத்தன்று நடக்கும் கிராம சபை கூட்டத்தை தலை குந்தாவில் நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதேபோன்று ஜெயபிரகாஷ் என்பவர் தலைமையில் அழகர் மலை பகுதி மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

உல்லத்தி ஊராட்சிக்கு உட்பட்ட அழகர் மலைப்பகுதியில் 280 குடும்பங்கள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றோம். கடந்த சில வாரங்களாக இந்த பகுதியில் கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த வாரம் அங்குள்ள சரஸ்வதி என்ற மூதாட்டி வீட்டுக்குள் நுழைந்து அவரை தாக்க முயன்றது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். எனவே கூண்டு வைத்து கரடியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த மூதாட்டியின் வீட்டை சரி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

அடிப்படை வசதிகள்

மொரக்குட்டி காலனி மக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் அரசு மூலம் கட்டி கொடுக்கப்பட்ட 60 வீடுகளில் 20 வீடுகள் மோசமான நிலையில் உள்ளன. மேலும் வீட்டின் மேல் பகுதியில் உயர் அழுத்த மின் கம்பிகள் செல்கின்றன. இது தவிர தெருவிளக்கு, சாக்கடை கால்வாய் உள்பட எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை. எனவே அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்