தூத்துக்குடியில் விசைப்படகுதொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்

தூத்துக்குடியில் விசைப்படகுதொழிலாளர்கள் திங்கட்கிழமை திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-06 18:45 GMT

தூத்துக்குடியில் விசைப்படகு தொழிலாளர்கள் வார பங்குத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விசைப்படகு மீனவர்கள்

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 245 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருந்தனர். கடந்த 4-ந் தேதி மீண்டும் மீன்பிடிக்க சென்றனர். மேலும் விசைப்படகு தொழிலாளர்கள் வாரம் தோறும் தொழிலாளர்களுக்கு பங்கு தொகையை மீண்டும் வழங்க வேண்டும், வாரத்தில் 6 நாட்களும் கடலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும், ஒரு படகில் இருந்து தொழிலாளர் விலகினால், உரிமையாளரிடம் இருந்து பெற்ற முன்பணத்தில் வழக்கம் போல் பாதியை திருப்பி செலுத்துவது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர்.

வேலை நிறுத்தம்

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் இரவு விசைப்படகு தொழிலாளர்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் கலைந்து சென்றனர்.

மேலும் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விசைப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அனைத்து விசைப்படகுகளும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனை தொடர்ந்து மீன்பிடி தொழிலாளர்கள், உரிமையாளர்கள் மற்றும் அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்